Header Ads



"முஜிபுர் ரஹ்மான் பேசியதில் பிழையொன்றுமில்லை" - நிஸாம் காரியப்பர்

-மப்றூக்-

வசீம் தாஜுதீன் மரணம் தொடர்பாக, நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமையினால், அது குறித்துப் பேச முடியாது என்று, மஹிந்த தரப்பு அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த புகார் தொடர்பில், சட்ட முதுமானியும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பரிடம் நாம் பேசினோம்.

'நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ள ஒரு வழக்குத் தொடர்பில் விமர்சிக்கக் கூடாது என்பது பொதுவானதொரு நியதியாகும். நீதிமன்றில் விசாரிக்கப்படும் வழக்குத் தொடர்பாக பொது வெளியில் விவாதிக்கும்போது, அந்த விவாதத்திலுள்ள கருத்துக்கள், சம்பந்தப்பட்ட வழங்கினை விசாரணை செய்யும் நீதிபதிகளின் மனதில் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும். அதனால்தான், நீதிமன்றத்திலுள்ள வழக்குகள் குறித்து பொதுவெளியில் விவாதிக்கக் கூடாது என்பர். ஆனால், வசீம் தாஜுதீன் மரணம் பற்றிய விவகாரம் தற்போது நீதிமன்றில் புலனாய்வு நிலையில்தான் உள்ளது. அதனால், அது குறித்து முஜிபுர் ரஹ்மான் பேசியதில் பிழையொன்றுமில்லை' என்றார் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர். 

'ஒரு வழக்குத் தொடர்பில், சட்டம் செயற்பட வேண்டிய விதம் குறித்தும், பொலிஸார் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் விவாதிக்க முடியும். ஆனால், நீதவானின் செயற்பாடுகள் தொடர்பில் பேச முடியாது. மேலும்,  நாடாளுமன்றத்துக்கு விசேட வரப்பிரசாதங்கள் உள்ளன என்பதற்காக, நீதிமன்றத்தில் நடக்கின்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில் விவாதித்துக் கொண்டிருக்க முடியாது' என்றும் நிஸாம் காரியப்பர் விபரித்தார். 

'இருந்தபோதிலும், வசீம் தாஜுதீன் மரணம் என்பது அரசியல் சார்ந்த ஒரு விவகாரமாக மாறியுள்ளமையினாலும், இது குறித்துப் பேசுவதற்கு முஜிபுர் ரஹ்மான் உரித்துடையவராகிறார்' என்று சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நம்மிடம் கூறினார்.

மேலதிக குறிப்பு............

வேறொரு சம்பவத்தினையும் இங்கு எழுத வேண்டியுள்ளது. இந்த மாதம் 04 ஆம் திகதி நாடாளுமன்றில் நீதி மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் உரையாற்றினார். அவருக்கு 10 நிமிடங்கள் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆயினும் அவர் 11 நிமிடங்களும் 50 விநாடிகளும் உரையாற்றினார். குறித்த உரையினை ஆரம்பித்து சரியாக 07 ஆவது நிமிடம் 43 ஆவது விநாடியின்போது, 'மகேஷ்வரனைப் படுகொலை செய்த சூத்திரதாரி, இன்று மீண்டும் இந்த நாடாளுமன்றத்தில் இருக்கின்றார்' என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா கூறினார். 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தனது கணவருமான மகேஷ்வரனின் மரணம் தொடர்பிலேயே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா அவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் அப்படிக் கூறியபோது, சபை அமைதியாக இருந்தது. விஜயகலாவின் அந்தக் கூற்றுக்கு எதிராக யாரும் அப்போது குரல் எழுப்பவில்லை. 'ஹான்சாட்'டிலிருந்து விஜயகலாவின் அந்த வார்த்தைகள் அகற்றப்படவுமில்லை. 

ஆனால், 'வசீம் தாஜுதீன் கொலையோடு தொடர்புபட்ட சூத்திரதாரிகள் இந்த நாடாளுமன்றத்தில் இருக்கின்றார்கள்' என்று முஜிபுர் ரஹ்மான் கூறியதும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் கொதித்தெழுந்தார்கள்? மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப அங்கத்தவர்களின் பெயரை இதன்போது முஜிபுர் ரஹ்மான் பயன்படுத்தியதாக ஏன் அவர்கள் புகார் கூறினார்கள்? அந்த வாசகங்களை 'ஹான்சாட்'டிலிருந்து நீக்க வேண்டுமென்று ஏன் அடம் பிடித்தார்கள்? என்கின்ற கேள்விகளைக் கேட்டுப் பார்த்தால், அவற்றுக்குப் பின்னால், ஏராளமான உண்மைகள் இருப்பதை கண்டு கொள்ள முடியும். வசீம் தாஜுதீன் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் வீசிய 'தொப்பி'களை, மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தலைகளுக்கு அளவாக இருந்தமையினால், எடுத்துப் போட்டுக் கொண்டார்கள் என்று, ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கூறிக் கொண்டமையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது. 

2 comments:

  1. The difference is Vijayakala directed towards Tamil MP and Mujibur Rahman directed towards Sinhala MP.

    ReplyDelete

Powered by Blogger.