வாஸ் குணவர்தனவிற்கு எதிரான, மற்றுமொரு வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான மற்றுமொரு வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோடீஸ்வர வர்த்தகர் முஹமட் சியாம் கொலைச் சம்பவம் தொடர்பில் அண்மையில் வாஸ் குணவர்தன, அவரது மகன் மற்றும் மேலும் நான்கு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.
வாஸ் குணவர்தன கப்பம் கோரியதாக குற்றம் சுமத்தி தொடுக்கப்பட்டிருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மஹார நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை தேவைப்படுவதாகவும் இதுவரையில் உரிய ஆலோசனை கிடைக்கவில்லை எனவும், இதனால் வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ம் திகதிக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதவான் மஹிந்த பிரபாத் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுகவீனம் காரணமாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
வழக்கு விசாரணை அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, வழக்கு எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 29ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.
களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித கெலும் மடவல கொலைச் சம்பவம் தொடர்பான அரச தரப்பு சாட்சியாளராக சிங்கப்பூர் சரத் எனப்படும் சரத் எதிரிசிங்கவை கொலை செய்யாமல் இருப்பதற்கு அவரிடமிருந்து 30 லட்சம் ரூபா கப்பமாக கோரப்பட்டுதில் 15 லட்சம் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டது என முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
Post a Comment