Header Ads



மாகாண முதலமைச்சர்கள் போர்க்கொடி - ஜனாதிபதி - பிரதமரை அவசரமாக சந்திக்கிறார்கள்

மாகாணசபைகளை கலைக்குமாஞ மாகாண முதலமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைச் சந்தித்து இது விடயம் பற்றி மாகாண முதலமைச்சர்கள் பேச்சு நடத்தவும் தீர்மானித்துள்ளனர்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் போது, அவற்றுக்கான அதிகாரம் சூன்யமாக்கப்பட்டுள்ளது எனவும், இதனால் நாட்டில் தொடர்ந்தும் மாகாண சபைகளை நடாத்திச் செல்வதில் அர்த்தமில்லை எனவும் மாகாண சபைகளை கலைத்து விடுமாறும் நாட்டின் மாகாண முதலமைச்சர்கள், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளனர்

வரலாற்றில் முதல் தடவையாக மாகாண சபைகளுக்கு காணப்பட்ட நிதி அதிகாரம், அமைச்சு ஒன்றின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் முழு மாகாணசபை முறைமையும் குழப்ப நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியல் சாசனத்தினையும் மீறி எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என மாகாண முதலமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்று (07) நண்பகல் அளவில் மாகாண முதலமைச்சர்கள் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மட்டுமன்றில் ஒட்டுமொத்த வரவு செலவுத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் இன்று ஜனாதிபதியுடன் பேசப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு மற்றும் அதிகாரம் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், மாகாண சபைகளை கலைத்து விடுமாறு ஜனாதிபதியிடம் கோருவதென்ற கடுமையான தீர்மானத்தில் மாகாண முதலமைச்சர்கள் இருக்கின்றார்கள் என கொழும்பு சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மாகாண முதலமைச்சர்கள் வரவு - செலவுத் திட்டத்தை ஏன் எதிர்க்கின்றனர் என்பதற்கான விளக்கத்தை வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் பேசல ஜயரட்ன வழங்கினார். மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் கீழ் மாகாணசபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பவுள்ளது. இந்த நடவடிக்கையைக் கண்டிப்பதுடன், இது அரசியல் அமைப்புக்குப் புறம்பானதாகும்.

எவ்வித ஆய்வும் செய்யாமல் வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாத இறுதியிலும் அமைச்சின் செயலாளரிடம் சென்று மாகாண முதலமைச்சர்கள் பணம் கேட்டு கெஞ்சவேண்டிய நிலைமை ஏற்படும். வரவு - செலவுத் திட்ட யோசனையின் அடிப்படையில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் ஒரு கிளைக் காரியாலயமாக மாகாண  சபைகள் மாற்றப்பட்டுள்ளன.

அதேவேளை, மாகாணசபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் எண்ணம் அரசுக்குக் கிடையாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் கீழ் எதிர்காலத்திலும் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.  அத்துடன்,  வடமத்திய மாகாண முதலமைச்சரின் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார். வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம்  வாசிப்பு  மீதான வாக்கெடுப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது. தற்போது குழுநிலை விவாதம் இடம்பெற்று வருகின்றது. இதன்போது திருத்தங்களை முன்வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.