Header Ads



புலிகளுக்கு மகிந்த வழங்கிய மில்லியன்கள் - விசாரணையை ஆரம்பிக்க ரணில் பணிப்பு

2005ஆம் ஆண்டுக்கு முன்னரும் அதற்கு பின்னரும் மஹிந்த ராஜபக்சவின் தரப்பினர் விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய பல மில்லியன் ரூபாய்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விசாரணைகள் முடிவடையும்போது இந்த நாட்டு மக்கள் ராஜபக்சவினரின் நாட்டுப்பற்று தொடர்பில் அறிந்துக்கொள்ளமுடியும் என்று அமைச்சர் கயந்த குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விசாரணைகளுக்கான பணிப்புரையை விடுத்துள்ளார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது அவரின் பிரசாரங்களுக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சி இந்த இரகசிய விடயத்தை முதலில் வெளியிட்டிருந்தார். அவரின் தகவல்படி பல மில்லியன் ரூபாய்கள் விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டன.

இதனையடுத்து அந்தப்பொறுப்பை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் பொறுப்பேற்றார்.

அவரும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதி என்று கூறப்படும் எமிழ்காந்தனுடன் மேற்கொள்ளப்பட்ட பணப்பரிமாற்றம் குறித்து தகவலை வெளியிட்டார்.

டிரான் அலஸ் தமது வீட்டின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டபோதே இந்த விடயத்தை வெளியிட்டார்.

எனினும் ராஜபக்ச - விடுதலைப்புலிகளின் நிதிப்பரிமாற்றம் குறித்த தகவல்களை வெளியிட்ட ஸ்ரீபதி சூரியாராச்சி 2008ஆம் ஆண்டு பெப்ரவரி 9ஆம் திகதியன்று அநுராதப்புரத்தில் இருந்து கொழும்புக்கு திரும்பிக்கொண்டிருக்கையில் விபத்து ஒன்றில் கொல்லப்பட்டார்.

ஸ்ரீபதி சூரியாராச்சியின் தகவல்படி- 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வடக்கு கிழக்கில் ஆதரவு இருப்பதால் அதனை முறியடிக்க விடுதலைப்புலிகளின் ஆதரவை பெறவேண்டும் என்ற அடிப்படையில் யோசனை ஒன்றை முன்வைத்தார்.

இதன்படி சூரியாராச்சி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, திறைசேரியின் முன்னாள் செயலாளர் பி பி ஜெயசுந்தர, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் எமிழ்காந்தனை கொழும்பு ரொஸ்மிட் பிளேஸில் உள்ள டிரான் அலஸின் அலுவலகத்தில் வைத்து சந்தித்தனர்.

இதன்போது ராஜபக்சவின் வெற்றிக்காக விடுதலைப்புலிகளின் ஆதரவை எவ்வாறு பெறுவது என்று ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இதன் பெறுபேறாக ரணில் விக்கிரமசிங்க அந்த தேர்தலில் 186ஆயிரம் வாக்குகளால் மஹிந்தவிடம் தோல்விக்கண்டார்.

வடக்கு கிழக்கு தமிழர்கள் வாக்களிப்பதை தடுத்தமையே இதற்கான காரணமாக அமைந்தது என அப்பொழுது இருந்தே பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதற்காக விடுதலைப்புலிகளுக்கு படகுகளை கொள்வனவு செய்தவதற்காக 180மில்லியன் ரூபாய்களை எமிழ்காந்தன் கோரினார். இதற்கு பசில் ராஜபக்சவும் உடனடியாக இணக்கம் வெளியிட்டார்.

இதன்படி 180மில்லியன் ரூபாய்கள் பல சூட்கேஸ்களில் வைத்து எமிழ்காந்தனிடம் கையளிக்கப்பட்டன. இந்த பணம் “ராடா” என்ற நிர்மாண நிறுவனத்தின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்டன.

இதன்காரணமாக “ராடா” நிறுவனத்தின் கணக்குகள் மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

கணக்காய்வாளர் திணைக்களம் ராடா நிறுவனம் வடக்கில் மேற்கொண்டுள்ள வீடமைப்பு திட்டங்களை பரீட்சிக்க சென்றபோது ஓமந்தை இராணுவ சாவடியில் வைத்து நிறுவன அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதேவேளை ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான இலங்கையில் பதிவுசெய்யப்படாத இரண்டு நிறுவனங்களுக்கு வீடமைப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதன்பெறுமதி 100 மில்லியன் ரூபாய்களாகும்.

எனினும் இந்த நிறுவனங்களால் வடக்கில் பெயர் குறிப்பிடப்படாத இடங்களில் 800 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தன என்றும் ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.