Header Ads



படிக்கும் போதே, கண்முன் ஓடும் காட்சிகள்..!

முகம் சுளிக்க வைக்கும் குடிசைப் பகுதிகளுக்குள் எல்லம் ஒயிட் காலர்கள் ஓடியாடி உதவுகிறார்கள். குடிசைவாசிகளோடு உணவைப் பிரித்து உண்கிறார்கள். ‘எங்கள் வீட்டில் வந்து தங்கிக்கொள்ளுங்கள்’ எனக் குரல்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் விளிம்பு நிலை மனிதர்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தங்கியிருந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் உணவளித்தார்கள். மொழி தெரியாத மாநிலங்களில் இருந்துகூட ஆதரவுக் கரங்கள். தண்ணீர் தராத கர்நாடகாகூட கண்ணீரோடு நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. காவடி தூக்கியவர்களும், பால் குடம் எடுத்தவர்களும், மண் சோறு சாப்பிட்டவர்களும், லாயிட்ஸ் ரோட்டில் ஒப்பாரி வைத்தவர்களும் எங்கே போனார்கள்?

சவப்பெட்டி தூக்கிய இஸ்லாமியர்கள்..!

‘எங்கள் பாட்டி இறந்துவிட்டார். உடலைக் கொண்டு செல்ல முடியாமல் தவிக்கிறோம். உதவி செய்யுங்கள்’ - மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க-வினருக்கு சூளைமேடு ஏரியாவில் இருந்து வந்தது இப்படியொரு தகவல். சூளைமேடு பகுதியில் வசிக்கும் பிரிட்டோ என்ற போலீஸ்காரரின் பாட்டி அந்தோனி அம்மாள் மருத்துவமனையில் இறந்துவிட்டார். பிரிட்டோ போனில் உதவி கேட்க களத்தில் குதித்திருக்கிறார்கள் த.மு.மு.க-வினர். அந்தோனி அம்மாளின் உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு சூளைமேடு ஏரியா முழுவதும் கழுத்தளவு தண்ணீர். மருத்துவமனையில் இருந்து உடலை ஸ்டெரக்சரில் வைத்து கழுத்தளவு தண்ணீரில் தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு வந்து வீட்டில் சேர்த்தனர் த.மு.மு.க-வினர். மழை அதிகமாக இருந்ததால், அடக்கம் செய்யக் குழிகூட தோண்ட முடியவில்லை. ஒரு நாள் கழித்துத்தான் குழி தோண்ட முடிந்தது. கிறிஸ்தவ முறைப்படி சவப்பெட்டியில் அந்தோனி அம்மாளின் உடலை வைத்து அடக்கம் செய்தனர். மருத்துவமனையில் இருந்து உடலை வீட்டுக்குக் கொண்டு வந்த த.மு.மு.க-வினர்தான் அடக்கம் செய்யவும் உதவியிருக்கிறார்கள். வீட்டில் இருந்து சவபெட்டியை இரண்டு கி.மீ. தூரத்துக்கு வெள்ளத்தில் சுமந்துபோயிருக்கிறார்கள்.

‘‘அஞ்சலி செலுத்த உறவினர்கள்கூட வரமுடியவில்லை. வெள்ளம் சூழ்ந்து மழையும் பொழிந்துகொண்டிருந்த அந்த நரக வேதனையில் வீட்டில் மரணம் என்றால், அந்த வலியை வார்த்தைகளில் சொல்ல முடியாது.அப்படிப்பட்ட சூழலில் முஸ்லிம் இளைஞர்கள் செய்த உதவியை நினைத்து நெகிழ்ந்து போகிறேன்’’ என நெகிழ்கிறார் பிரிட்டோவின் அம்மா மரியம்மாள். த.மு.மு.க. மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் முஹம்மது அலி தலைமையிலான டீம்தான் இந்தச் சேவையை செய்திருக்கிறது. ‘‘கிறிஸ்தவரின் உடலை முஸ்லிம்கள் சுமந்தார்கள் எனச் சொன்னால்கூட அது மலிவான பிரசாரம் ஆகிவிடும். இது மனிதநேய உதவி. இந்த வெள்ளத்துக்காக மட்டுமல்ல... ரத்ததானம், ஆம்புலன்ஸ் உதவிகள் என ஏற்கெனவே செய்து வருகிறோம்’’ என்றார். வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வீட்டில் இருந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இறந்த தகவலை முதல் மாடியில் குடியிருந்தவர்கள் த.மு.மு.க-வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். அந்தக் கட்சியின் தொண்டர் அணியினர்தான் உடலை மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள். மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் தாஹா நவீன் தலைமையில்தான் இந்தப் பணி நடைபெற்றி ருக்கிறது. “தற்கொலை செய்தவரின் உடலை வெளியே கொண்டு வரவே சிரமமாகிவிட்டது. அந்தப் பகுதி முழுவதும் வெள்ளநீர் நிரம்பியிருந்ததால் ஆம்புலன்ஸ்கள்கூட வரவில்லை. எங்கள் அமைப்பில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுத்தான் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்” என்றார் தாஹா நவீன்.

பிணத்தோடு மூன்று நாட்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் உள்ள அரசு குடியிருப்பு வளாகத்தின் அருகில் வயதான மூதாட்டி ஒருவர் தனியாக குடிசைபோட்டு வசித்து வந்தார். வெள்ளம் திடீரென்று பெருக்கெடுத்து ஓடியதால் மூதாட்டியின் வீடு அடித்துச் செல்லப்பட்டது. உதவி கேட்டு மூதாட்டி அலற, மாடியில் வசித்து வந்த அவருடைய மகள், மூதாட்டியைத் தூக்கிக்கொண்டு வரும்போது உயிர் பிரிந்துவிட்டது. அதனால், மாடியில் இருந்து உடலைக் கீழே கொண்டு வர முடியவில்லை. வெள்ளம் வடியாததால் மூன்று நாட்களாக உடலை வைத்துக்கொண்டு திண்டாடி யிருக்கிறார்கள். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினருக்குத் தகவல் கிடைத்து உடலை மீட்டு அடக்கம் செய்திருக்கிறார்கள். மீட்புப் பணியில் ஈடுபட்ட அந்த அமைப்பின் நிர்வாகி அப்துல் ரஹ்மான், ‘‘அந்தப் பகுதி முழுவதும் கழுத்தளவு தண்ணீர் சூழ்ந்திருந்ததால் உடலை மாடியில் இருந்து இறக்க முடியவில்லை. இதனால் வீட்டில் துர்வாடை வீசியது. அந்த உடலோடு உறவினர்கள் பரிதவித்து நின்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர், போலீஸ் என யாருமே உதவவில்லை. ஃபிரிசர் பாக்ஸைக்கூட அங்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் எங்களுக்குத் தகவல் கிடைத்து உடலைத் துணியால் சுற்றி வெளியே கொண்டு வந்து நல்லடக்கம் செய்தோம்’’ என்றார்.

உடலை மட்டுமே மீட்க முடிந்தது!

தியாகராய நகரில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பில் வெள்ள சூழ்ந்தது. தரை தளம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. கனகாம்பாள் என்ற மூதாட்டியை உறவினர்கள் சிலர் பரணில் படுக்கவைத்துவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். தண்ணீர் உணவு இல்லாமல் கனகாம்பாள் இறந்துவிட இரண்டு நாட்கள் கழித்துத்தான் கனகாம்பாள் பிணத்தை போலீஸ் மீட்டது. “அம்மா இருந்த வீட்டுக்குள் தண்ணி வந்துடுச்சினு தெரிஞ்ச உடனே கிளம்பி வந்துட்டேன். நான் வர்றதுக்குள்ள தண்ணி சரசரனு ஏறிடுச்சு. உதவிக்கு படகு கேட்டு போலீஸுக்கும் ராணுவத்துக்கும் போன் பண்ணோம். ஆனா யாரும் வரல. மறுநாள் பக்கத்து வீட்டுக்காரங்க உங்க அம்மா வீட்டுல இருந்து நாத்தம் அடிக்குதுனு சொன்னாங்க. அப்புறம் போலீஸுக்கு போன் செஞ்சு வீட்டுல இருந்து நாத்தம் அடிக்குது, இப்பவாச்சம் வாங்கனு சொன்ன பிறகுதான் படகு கொண்டு வந்தாங்க. உள்ள போய் பாத்தா அம்மா பிணமா கிடந்தாங்க” என்றார் கனகாம்பாளின் உறவினர் செல்வம்.

ரோட்டில் நடைபெற்ற தொழுகை..!

மதங்கள் பார்க்காமல் பள்ளிவாசல்களில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். சென்னை மக்கா பள்ளி, மண்ணடி பள்ளி, தாம்பரம் பள்ளி உள்ளிட்ட பள்ளிவாசல்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருந்தனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் உடை, மாத்திரைகள் அங்கு வழங்கபட்டன. வேளச்சேரியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருந்தனர். வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை அன்று பள்ளிவாசலில் உள்ள மக்களை வெளியேற்ற கூடாது என முடிவு செய்து சிறப்புத் தொழுகையை அங்கிருந்தவர்கள் சாலையில் தொழுத சம்பவமும் நிகழ்ந்தது.

தவித்த கண்பார்வையற்றோர்!

சென்னை பெருவெள்ளத்தில் சாதாரண மனிதர்களே தத்தளித்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் நிலையைச் சொல்ல வேண்டுமா? கோடம்பாக்கம் லிபர்டி அருகே ஆதிதிராவிடர் அரசினர் விடுதியில் வெள்ளம் சூழத் தொடங்கியது. அதில் தங்கி இருந்த கண்பார்வையற்ற மாணவர்கள் 11 பேருக்கு என்னவென்று நிலவரம் புரியவில்லை. நண்பர்களின் உதவியுடன் டாக்டர் நடேசன் சாலையில் உள்ள இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மஸ்ஜித்துர் ரஹ்மான் மசூதிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் சிக்கியிருந்த இடத்துக்குச் சென்று பத்திரமாக மீட்கப்பட்டு மசூதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

1 comment:

  1. Masha allah! Words are inadequate to praise their humanitarianism. May Allah acknowledges the meritorious deeds of all Muslims!

    ReplyDelete

Powered by Blogger.