விலங்குகள் நலன்புரி சட்டம், முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் செயற்படுத்த இணக்கம்
அரசாங்கம் விரைவில் நிறைவேற்றவுள்ள விலங்குகள் நலன்புரி சட்டமூலத்தில் சமய மற்றும் உணவு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் விலங்குகளுக்கு விதி விலக்களிக்கப்படும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.
முஸ்லிம் கவுன்சில் ஒப் சிறிலங்காவின் ஏற்பாட்டில் முஸ்லிம் தூதுக்குழு ஒன்று சனியன்று அமைச்சரை சந்தித்தபோது இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது. அமைச்சரவையில் பரிசீலனையிலுள்ள இச்சட்டமூலத்தில் விலங்கு கொடுமை தொடர்பாக குறிப்பிட்டுள்ள சரத்து ஹலால் முறையிலான விலங்கு அறுப்புக்கு பாதகமாக இருப்பதனால் மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா இரு வாரங்களுக்கு முன் அமைச்சரவையில் ஆட்சேபனை செய்தமையை அடுத்து சட்டமூலத்துக்கு அங்கீகாரம் அளிப்பது ஒத்திவைக்கப்பட்டது.
சட்டமூலத்தின் குறித்த சரத்து திருத்தப்படும் என்று அமைச்சர் தூதுக்குழுவினரிடம் தெரிவித்தார். உணவுக்கு பயன்படுத்தப்படாத விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதனை தவிர்ப்பதும் இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையிலான தூதுக்குழுவில் அதன் உபதலைவர் ஹில்மி அஹமட், செயலாளர் அஸ்கர் கான் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதிநிதி மௌலவி அப்துல் ரஹ்மான், தேசிய சூறா கவுன்சில் பிரதிநிதி சட்டத்தரணி யூசுப், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் பிரதிநிதி எம்.தாசிம், ஆர்.எம்.எப். பிரதிநிதி சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
Post a Comment