Header Ads



மழை நிவாரண பணியில், இஸ்லாமியர்கள் முன்னிலை வகிப்பதில், வியப்பு எதுவுமில்லை..!

-கான் பாகவி-

மழை நிவாரண பணியில் இஸ்லாமிய அமைப்புகளே முன்னிலையில் உள்ளன அனைத்து ஊடகங்களும் ஒப்புதல். மழை நிவாரண பணியில் முஸ்லிம்களே முன்னிலையில் உள்ளனர் . இது நாம் சொல்வதல்ல பாதிக்கப்பட்ட மக்களின் ஒருமித்த குரல். அனைத்து ஊடகங்களும் ஒப்பு கொண்டுவிட்ட உண்மை

ஆனால், இதில் எனக்கு வியப்பில்லை. காரணம், முஸ்லிம்கள் ஊடகத்தில் முகத்தைக் காட்டிக்கொள்ளவோ தீவிரவாதப் பழியைத் துடைக்கவோ நல்லபேர் எடுக்கவோ இந்த மகத்தான சேவையைச் செய்யவில்லை. அவர்கள் பின்பற்றும் மார்க்கம் சொன்ன கட்டளைக்கு அடிபணிந்து, இறைவனின் அன்பையும் நெருக்கத்தையும் எதிர்பார்த்தே இந்தத் தொண்டை மேற்கொண்டனர். ஒரு உண்மையான முஸ்லிம், மற்றவர் துயரத்தைக் கண்டு வாளாவிருக்கமாட்டான். ஓடிப்போய் தன்னால் முடிந்த உதவிகளை நல்குவான். அது, தம்மைக் கொல்ல வந்த பகைவனாக இருந்தாலும் சரியே

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இல்லாத பகைவர்களா?  அந்தப் பகைவர்களுக்குக்கூட நன்மையே செய்யுமாறுதான் இறைவன் கட்டளையிட்டான். அப்படி நடந்துகொண்டால் பகைவனும் நண்பனாகக்கூடும் என்று விளக்கமளித்தான். “நன்மையும் தீமையும் சமமாகா. நன்மையைக் கொண்டே (தீமையை) வெல்வீராக! அப்போது, யாருக்கும் உமக்குமிடையே பகைமை இருக்கிறதோ அவர்கூட உற்ற நண்பரைப் போன்று மாறிவிடுவார்” (41:34) எனத் திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.

அவ்வாறே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  மனிதர்கள்மீது அன்பும் கருணையும் காட்டாதவர்மீது இறைவன் கருணை காட்டமாட்டான். (ஸஹீஹுல் புகாரி)  மறுமை நாளில் மனிதனிடம் இறைவன் இப்படிக் கேட்பானாம்: மனிதா! உன்னிடம் நான் உணவு கேட்டேன்; நீ எனக்கு உணவளிக்கவில்லையே! அப்போது மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதி! உனக்கு எப்படி நான் உணவளிப்பேன்?” என்பான். அதற்கு இறைவன், “என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவு கேட்டான்; அவனுக்கு நீ உணவு தரவில்லை. அவனுக்கு மட்டும் நீ உணவளித்திருந்தால், அதை என்னிடம் (இப்போது) நீ அடைந்திருப்பாய்?” என்பான். அவ்வாறே, தண்ணீர் கேட்டதாகவும் இறைவன் கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)

கடந்த பத்து நாட்களாக சென்னை மாநகரை வரலாறு காணாத கனமழை புரட்டிப் போட்டுவிட்டது. சென்னை மாவட்டம் மட்டுமன்றி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் பெருவெள்ளத்தில் சிக்கின. அதிலும் கடந்த சில நாட்களாக கடலூர் உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களும், புதுச்சேரி மாநிலமும் பேரிழப்புகளைச் சந்தித்தன.

இது மனிதத் தவறுகளால் நிகழ்ந்திருக்கட்டும்! இயற்கைச் சீற்றத்தால் நிகழ்ந்திருக்கட்டும்! எப்படியானாலும், இலட்சக்கணக்கான மக்கள் பேரிழப்புகளைச் சந்தித்தனர். இறப்பு மட்டும் 294பேர் என்று அரசு கூறினாலும், உண்மையில் அதைக் காட்டிலும் பன்மடங்கானபேர் வெள்ளத்தில் சிக்கியும் வேறு முறைகளிலும் உயிரிழந்துள்ளனர் என்பது அதிகாரிகள் மட்டத்தில் பேசிக்கொள்ளப்படும் இரகசியமாகும் என்று சொல்லப்படுகிறது.

விலை உயர்ந்த பொருட்கள், பள்ளி மற்றும் கல்லூரி புத்தகங்கள், முக்கியமான ஆவணங்கள், அடையாள அட்டைகள், உணவுப் பொருட்கள், வாகனங்கள்… என எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு, அடுத்த வேளை உணவுக்கும் ஒரு செம்பு குடிநீருக்கும் வழியில்லாமல் மக்கள் நின்றது பாறையையும் கரைத்துவிடும் துயரம்.

குழந்தைகள் பாலின்றி, நோயாளிகள் மருத்துவ உதவியின்றி, கர்ப்பிணிகள் சுமையை இறக்கிவைக்க இடமின்றி, முதியோர் மற்றும் பெண்கள் வெளியேற வழியின்றி பட்ட அவதிகள் எழுத்தில் அடங்கா. பலரிடம் பணம் இருந்தது. அதனால் எந்தப் பயனும் இல்லை. சொந்தங்கள் இருந்தனர் ஊரில். அவர்களால் இங்குள்ளவர்களுடன் தொலைபேசியில்கூடப் பேச முடியாத நெருக்கடி. ஏன்? என்று கேட்க ஆளில்லாத யுகமுடிவு நிலை.

அரசாங்கம் விழித்து உதவிக்கு வருவதற்குள் நிலைமை கைமீறிவிட்டது. இந்த நெருக்கடியான நிலையில்தான் சமூகக் கரம் தேவைப்படுகிறது. உதவிக்கு ஏங்கும் மனிதர் எந்த மதம்? எந்த சாதி? எந்த மொழி என்றெல்லாம் வேறுபாடு பார்ப்பதற்குரிய நேரமன்று இது. இஸ்லாம் காட்டிய வழியில், கூப்பிடாமலேயே உணவுப் பொட்டலங்களையும் குடிநீர் பாக்கெட்களையும் பாய், துப்பட்டி போன்ற அவசர பொருட்களையும் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு, இடுப்பளவு தண்ணீரில் நடந்து அல்லது படகில் நீந்திச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய பொற்கரங்கள் முஸ்லிம் இளைஞர்களின் பண்பட்ட மனிதநேயக் கரங்களாகும்.

பார்ப்போர் அதிசயிக்க, ஊடகங்கள் பல அலட்சியம் செய்ய, பாதிக்கப்பட்டோரின் கண்களும் கல்புகளும் அகல விரிய – இரவு, பகல் பாராமல் – களப் பணியாற்றிய அந்த இளவல்களும் அவர்களுக்கு வழிகாட்டிய தலைவர்களும் பாராட்டுக்குரியவர்கள்; நன்றிக்குரியவர்கள். அவர்களை எவ்வளவு மெச்சினாலும் தகும். முஸ்லிம்களைப் பற்றிய தவறான பார்வையை நொடியில் மாற்றிப்போட்டவர்கள் இந்தத் தம்பிகள்; பெண்களும்தான். தங்கள் பங்கிற்குக் களம் கண்ட அந்தச் சகோதரிகள் சமுதாயக் கண்மணிகள். இளவல்கள்தான் இப்படி என்றால், முஸ்லிம் பெருங்குடி மக்கள் தாராளமாக அள்ளிக் கொடுத்ததை என்னவென்று வர்ணிப்பது? அரசாங்கம் கொடுப்பதற்கும் சாதாரண குடிமக்கள் கொடுப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அரசாங்கம் தரும் உதவிகளை வாங்குவதற்கு அணிவகுத்து நிற்போர் மத்தியில், பிறருக்கு உதவ அணிவகுக்கும் கூட்டம் எவ்வளவு பண்பட்ட, கண்ணியமான கூட்டமாக இருக்க வேண்டும்! பணமாக, துணியாக, தானியமாக, பொருளாக எனப் பல வழிகளில் நிவாரண உதவிகளை வழங்கிய ஜமாஅத்தார் பாராட்டுக்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

2 comments:

  1. Absolutely borther... your article overwhelmed me. I invoke Allah to fortify the mind and their dedication of Tamilnadu Muslims for the sake of Islam and make them a good precedent to the entire Muslim Ummah!

    ReplyDelete

Powered by Blogger.