Header Ads



மகிந்த நிராகரித்த பிரகடனத்தில், மைத்திரி அரசு கையெழுத்து

பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்படுவதில் இருந்து அனைத்துக் குடிமக்களையும் பாதுகாப்பது தொடர்பான ஐ.நாவின் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்காவும் கையெழுத்திடவுள்ளது.

இந்த முக்கியமான பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு, சிறிலங்காவின் அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவார்.

பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்படுதலை  ஒரு மனித உரிமை மீறலாக இந்தப் பிரகடனம் வரையறுப்பதுடன்,  இதனை ஒரு குற்றவியல் நடவடிக்கையாக கருதும் வகையில் சட்டங்களை வகுக்கவும் உறுப்பு நாடுகளை வலியுறுத்துகிறது.

இந்தப் பிரகடனத்தில் உலகிலுள்ள 94 நாடுகள் கையெழுத்திட்டுள்ள அதேவேளை, மேலும் 51 நாடுகள் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்தப் பிரகடனத்தில் சிறிலங்காவும் கையெழுத்திட அனுமதி கோரும் பத்திரத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

சிறிலங்காவில் காணாமற்போகச் செய்யப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வந்த நிலையில், முன்னைய அரசாங்கம் இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட மறுப்புத் தெரிவித்திருந்தது.

No comments

Powered by Blogger.