Header Ads



சாகர தேரர் உண்மையான மதகுருவாக இருந்தால், எனது அழைப்பை ஏற்கவேண்டும் - றிஷாத்

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

தன்மீதும் வடபுல முஸ்லிம் அகதி சமூகத்தின் மீதும் அவதூறுகளையும் அபாண்டங்களையும் பரப்பி வரும் மாத்தறை ஆனந்த சாகர தேரருடன் எந்த இடத்திலும் தான் பகிரங்க விவாதம் நடத்த தயார் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் இன்று பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

வில்பத்துவில் முஸ்லிம்கள் அத்துமீறி காட்டை அழிப்பதாகவும் அந்த காட்டை பயன்படுத்தி தான் போதை வஸ்து வியாபாரம் செய்வதாகவும் கொழும்பு விகாரமகா தேவி பூங்காவிற்கு எதிரில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கருத்து தெரிவித்தமைக்காகவே தான் இவ்வாறான அழைப்பை விடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆனந்த சாகர தேரரின் விஷமத்தனமான கருத்துக்கள் தொடர்பில் இன்று காலை கொழும்பு வொக்ஷல்வீதி சதோச கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் உரையாற்றினார்.

ஆனந்த சாகர தேரர் உண்மையான மதகுருவாக இருந்தால் தான் விடுக்கும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு விவாதத்திற்கு முன்வர வேண்டும் என்றும் இல்லையேல் ஊடகங்களின் மூலம் தனக்கும் தனது சமூகத்திற்கு எதிராக தெரிவித்த கருத்துகளை வாபஸ்பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனந்த சாகர தேரரின் இந்த விஷமத்தனமான கருத்துக்கள் தென் இலங்கை வாழ் பெரும்பான்மைச் சமூகத்தை தவறான வழியில் திசை திருப்பக்கூடியதெனவும் இதன் மூலம் இன ஐக்கியத்தை சீரகுழைக்க தேரர் முற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விகாரமகாதேவி பூங்காவில் கடந்த சனிக்கிழமை அப்பாவி மக்களை தவறாக வழி நடத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து தன்னை அவமானப்படுத்தியமைக்காக தான் அன்றைய தினம் கறுவாத்தோட்ட பொலிஸில் புகார் செய்ததாகவும் தனது சட்டத்தரணியூடாக தேரரிடமிருந்து இரண்டு வௌ;வேறு கருத்துக்களுக்குமாக தலா நூறு கோடி நஷ்ட ஈடு வேண்டி கோரிக்கை கடிதமொன்;றை அனுப்பி வைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு தானும் தனது கட்சியும் ஆதரவளித்ததை தொடர்ந்து இனவாதிகள் என்மீது அபாண்டங்களை பரப்பி வருகின்றனர். எனது அரசியல்வாழ்வையும் என்னையும் அழிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

இனவாத இயக்கங்கள் சிங்கள, ஆங்கில ஊடகங்களை பயன்படுத்தி இந்த முயற்சியை மேற்கொள்கின்றன. என்னதான் பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் நான் எனது சமூகத்திற்கான பயணத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் எனது உயிர்போனாலும் நியாயமாக மனச்சாட்சியுடன் மேற்கொள்ளும் எனது காரியங்களை விட்டுக்கொடுக்க மாட்டேன் அதேபோன்று சிறுபான்மைச் சமூகத்திற்கெதிராக எந்த அநியாயம் நடந்தாலும் நான் வாளவிருக்கவும் போவதில்லை.

நானும்   சிறுவயதிலே அகதி முகாம் வாழ்க்கையை அனுபவித்து அல்லல்பட்டவன் இறைவன் எனக்கு வழங்கிய பதவிகள் மூலம் நான் சார்ந்த சமூகத்திற்கு பணியாற்றுவதற்கு எவரும் எனக்குத் தடைகள் விதிக்க முடியாது.

வில்பத்து காட்டில் ஓரங்குல நிலத்தையேனும் முஸ்லிம்கள் அபகரிக்கவில்லை. எம்மை மீள்குடியேற்றுமாறு நாங்கள் வெளிநாடுகளிலோ ஐநா சபையிலோ முறையிடவுமில்லை. கடந்த அரசாங்கத்தின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடமுமே மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்தோம்.

ஜனாதிபதி விசேட செயலணி மூலம் விடுவிக்கப்பட்ட தமக்கு சொந்தமான காணிகளிலேயே முசலி பிரதேச மக்கள்  குடியேறி வருகின்றனர். இந்த நாட்டையும் வில்பத்து காட்டையும் நேசிப்பதாக கூறும் இனவாத இயக்கங்கள் புலிகளால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டபோது எங்களுக்கு ஆதரவாக எப்போதாவது குரல் கொடுத்துள்ளனரா?

இணையத்தலங்களிலும் முகநூல்களிலும் என்னை அவமானப்படுத்தும் கட்டுரைகளையும் காட்டூன்களையும் அடிக்கடி வெளியிடுவதன் நோக்கம்தான் என்ன? இதன் பின்புலம் என்ன? என்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கேள்வி எழுப்பினார்.

No comments

Powered by Blogger.