Header Ads



இவவும் ஒரு வாப்பாடம்மாதான் (ஒரு உண்மைச் சம்பவம்)

-Mohamed Ismail Umar Ali-

காலை வேளை, அந்த குறுகிய சாலை கொஞ்சம் சனப்புளக்கமாக இருந்தது.

சொப்பிங் பைகளினுள் பொன்னாங்காணிகளை அடைத்து ஒவ்வொரு பைகளையும் முப்பது ரூபாவுக்கு வீதியால் வருவோர் போவோர்க்கு விற்பனை செய்து கொண்டிருந்தாள் அந்த விதவை,

புதிதாக தோண்டிய வாய்க்கால் வரம்பில் நன்றாக கொளுத்து வளர்ந்த்துள்ளதாம் பொன்னாங்காணி ,வட்டைப்பொன்னான்காணி வீடுகளில் உரம் போட்டு வளர்க்கும் பொன்னான்கானிகளை விட சுவை அதிகம் என்பார்கள்.

"நாங்க ரெண்டுபேரு நேத்து பகல் சோறு திண்டுபோட்டு போனம், ஆளுக்கு ஒரு எருபேக்கு அசருக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்திட்டம்,அப்பிடியே ஜி பி.எஸ் அடியால போய் வட்டி வாய்க்கலால வந்து தேட்டரடிய ஏறினம் ம்............ஹ்..'

பெருமூச்சு விட்ட வண்ணம் ,மூச்சுவிடாமல் கூறி முடித்தாள் அந்த கைம்பெண்.

இரண்டு மூன்று பேருக்கு விற்றிருப்பாள் நானும் ஒரு பையை வாங்கிக்கொண்டிருக்கும்போது , பாடசாலை சீருடை அணிந்த ஒரு சிறுவன் அவள்முன் வந்து நின்றான், இடுப்பிலே சொருகியிருந்த வல்லுவத்தினை (சுருக்குப்பை) திறந்து ஒரு மஞ்சள் நிற நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள், சிறுவன் மலர்ந்த முகத்துடன் துவிச்சக்கர வண்டியில் ஏறி பாடசாலை செல்லும் தெருவால் செல்லுகின்றான்.

"அவன்ட வாப்பாவத்தான் ஏன்ட கயிட்டத்தால நல்லா படிப்பிக்க முடியல்ல, அவனாவது நாலெழுத்த படிக்கட்டும்,"

புடவைக்கொசுவத்தில் வல்லுவத்தை மறைத்த அவளே தொடருகிறாள்....... அவன்ட வாப்பாக்கு இன்னம் புத்தி இல்ல, மேசன் வேலைக்கி போய் ஒளைக்கிறது சோறு கரி திங்கத்தான் காணும்,ஒரு சீட்ட செப்ப கட்ட ஏலா,  நாசமத்துப்போயிருவாண்ட தலை எழுத்து அது.....

சொல்லிக்கொண்டே அடுத்தவருக்கு பொன்னாங்காணியை எடுத்து நீட்டுகிறாள்,

காலத்துக்குக் காலம் அப்பம், வண்டப்பம், புட்டு போன்றவற்றை சுட்டு விற்பது, பன்,பனையோலைகளால் ஏதாவது பின்னுவது போன்று ஏதாவது செய்து கொண்டே இருக்கிறாள், கல்யாணம் கட்டியவன் கைவிட்டுச்சென்ற காலத்திலிருந்து மகனை வளர்க்க கஷ்டப்பட்டவள் இன்று வரை மகனின் மகனை வளர்க்க கஸ்டப்படுகின்றாள்!

No comments

Powered by Blogger.