கிறிஸ்தவத்தை இஸ்லாம் முந்திவிடும், உலகில் வேகமாக பரவும் மதமாக இஸ்லாம் - மத ஆய்வு நிறுவனம்
அடுத்த நூற்றாண்டுக்குள் உலகில் கிறிஸ்தவர்களை விடவும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று பியூ ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. “மாற்று வகையில் குறிப்பிட்டால் இஸ்லாத்தை விடவும் ஏழு நூற்றாண்டுகள் முன்கூட்டிய கிறிஸ்தவத்தை கடைசியில் இஸ்லாம் முந்திவிடும்” என்று மத ஆய்வு நிறுவனமான பியூவின் இயக்குனர் அலன் கூபர்மான் குறிப்பிட்டார்.
உலகில் மக்கள் தொகையில் தற்போது மூன்றில் ஒரு பங்கினராக கிறிஸ்தவர்கள் உள்ளனர். அந்த மதத்தை மொத்தம் 2.2 பில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். எனினும் உலகில் வேகமாக பரவும் மதமாக இஸ்லாம் இருப்பதாக பியூ ஆய்வுகள் காட்டுகிறது. இந்த மதப்பிரிவினர் 2050 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில் 30 வீதம் வரை உயர்ந்திருக்கும்.
இதுவே 2010 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23 வீதமாகும். இதன்மூலம் 2050 ஆம் ஆண்டாகும்போது உலக கிறிஸ்தவ சனத்தொகையுடன் முஸ்லிம்களின் சனத்தொகை ஓரளவுக்கு சமநிலைக்கு வந்து விடும் என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
பியூ தரவுகளின்படி இஸ்லாம் தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. இதனால் 2070க்கு பின்னர் கூடிய விரைவிலேயே முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை விஞ்சுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த தரவுகளின்படி கிறிஸ்தவர்களின் வளர்ச்சி வேகம் குறைவடைவதாக அர்த்தம் கொள்ள முடியாதுள்ளது. அது இஸ்லாத்தின் வளர்ச்சி அளவுக்கு வேகமில்லை என்பதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி 2050 ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.1 பில்லியனில் இருந்து 2.9 பில்லியனாக அதிகரிக்கும் அதேவேளை முஸ்லிம்கள் 1.6 பில்லியனில் இருந்து 2.8 பில்லியனாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதில் முஸ்லிம்களில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர் சனத்தொகையும் அதிக இனப்பெருக்க விகிதமுமே இதற்கு பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. ஏனைய மதப்பிரிவினரை பொறுத்தவரை வயது கொண்ட சனத்தொகையே அதிகமாக காணப்படுகிறது. உதாரணமாக உலக பெளத்த சத்தொகையில் பாதி அளவானவர்கள் 30 வயதை விடவும் கூடியவர்களாவர்.
சராசரி குழந்தை பிறப்பு வீதம் 1.6 ஆகும். 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி முஸ்லிம் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் 15 வயதக்கு குறைவானவர்களாவர். சராசரியாக ஒரு முஸ்லம் பெண் 3.1 குழந்தை பெறுவதோடு கிறிஸ்தவ பெண் ஒருவர் 2.7 குழந்தைகளை பெறுகிறார்.
எனினும் தற்போதைய சூழலுக்கும் 2050 க்கும் இடையில் பல்வேறு விடயங்களில் மாற்றங்கள் நிகழலாம் என்று கூபர்மான் வலியுறுத்தினார்.
“இது இவ்வாறே நடக்கும் என்று எம்மால் கூற முடியாது. தற்போதைய நிலை அவ்வாறே தொடர்ந்தால் இது நிகழலாம்” என்று கூபர்மான் குறிப்பட்டார். “எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எமக்கு இப்போது தெரியாது. யுத்தம், புரட்சி, பஞ்சம், நோய் போன்றவை எம்மால் எதிர்வுகூற முடியாத விடயங்களாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment