சியாமும், வசீமும்
(விடிவெள்ளி)
பிரபல வர்த்தகர் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணர்வதன உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். மட்டுமன்றி இலங்கையின் பொலிஸ் துறைக்கு ஏற்பட்ட பாரிய கங்கமுமாகும்.
எது எப்படியிருப்பினும் இவ் வழக்கில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டனை வழங்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டிய அம்சமாகும்.
அதேபோன்றுதான் மற்றுமொரு பிரபல சம்பவமான பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மர்ம மரணம் தொடர்பிலும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால் அந்த விசாரணைகள் தற்போது மந்த கதியில் உள்ளமை கவலை அளிக்கிறது.
பரபரப்பாக போய்க்கொண்டிருந்த விசாரணைகள் தற்போது ஒரு மந்த கதியில் உள்ளதும் அல்லது கிடப்பில் போடப்பட்டுள்ளதான ஒரு உணர்வையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
விசாரணைகள் கடந்த பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட வேகமும் அதன் தற்போதைய நிலைமையுமே இந்த சந்தேகங்களை எற்படுத்துகின்றது.
குறிப்பாக இந்த விவகாரம் குறித்து புலனாய்வுப் பிரிவு பல்வேறு நபர்களிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ள நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் அங்கத்தவர் ஒருவர் விசாரணைகளை மூடி மறைக்கும் செயற்பாடுகளிலும் அதனை கிடப்பில் போடும் நடவடிக்கையிலும் முயற்சிகளை செய்து வருவதாக அறிய முடிகின்றது.
உண்மையில் அது தான் தற்போதைய விசாரணை மந்த கதிக்கு காரணமா எனும் சந்தேகத்தை வலுவடையச் செய்துள்ளது.
எவ்வாறாயினும் பிரபல றக்பீ வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் குறித்த விசாரணைகள் ஒழுங்கு முறையின் பிரகாரமும் நீதியான முறையில் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வஸீமின் தந்தையான தாஜுதீனிடம் சில மாதங்களுக்கு முன்னர் நேரில் உறுதியளித்திருந்தார்.
இந்த வாக்குறுதியை ஜனாதிபதி காப்பாற்றுவதுடன் குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்க வேண்டியது ஜனாதிபதியின் கடப்பாடாகும்.
ஜனாதிபதி அளித்த வாக்குறுதியின் அந்த நம்பிக்கையில்தான் தமது மகனின் மரணத்திற்கு நீதி கிட்டும் என்ற எதிர்பார்ப்பில் அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.
வஸீம் தாஜுதீனின் குடும்பத்தார் இந்த விவாகரத்தில் நீதி வேண்டி ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருந்து விட்டனர்.
இனிமேலும் அவர்களை காத்திருக்கச் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும். எனவே பிரபல ரக்பி வீரர் வஸீம் விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
இன்றேல் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் கடந்த கால அரசாங்கத்திற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லாது போய்விடும்.
Post a Comment