Header Ads



மொஹிதீன் கிராமத்துக்கு குடிநீர் வழங்க, ரஊப் ஹக்கீம் உத்தரவு

(மப்றூக்)

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மொஹிதீன் கிராமத்துக்கு குடிநீரை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய நீழ்வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்றுப் பிராந்திய முகாமையாளரிடம் அமைச்சர் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

மொஹிதீன் கிராமத்துக்கு நேற்று சனிக்கிழமை நேரடியாகச் சென்ற அமைச்சர், அங்குள்ள மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது, அங்குள்ளவர்கள் தமது கிராமத்துக்கு குடிநீரை வழங்குமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர். 

இதனையடுத்து, மொஹிதீன் கிராமத்துக்கு குழாய் இணைப்பின் மூலம் குடிநீரை வழங்குவதற்குரிய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜே.என். கரீமிடம் அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மொஹிதீன் கிராமத்தில் சுமார் 100 வீடுகள் உள்ளன. புதிய அரசாங்கம் ஆட்சியமைத்தவுடன் மேற்கொள்ளப்பட்ட100 நாள் திட்ட நடவடிக்கைகளின் போது இங்கு சுமார் 70 வீடுகள் அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

மேற்படி மொஹிதீன் கிராமத்தின் தரைப்பகுதிகள் பாறைகளால் அமைந்துள்ளமையினால், இங்கு கிணறுகளை அமைப்பதும், அவற்றிலிருந்து நீரைப் பெற்றுக் கொள்வதும் மிகவும் சிரமமான காரியமாக உள்ளது.

இதனால், இங்குள்ள மக்கள் தமக்கான நீரைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை, இங்குள்ள பெரும்பாலான மக்கள், குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் எதிர்கொண்டுவரும் சிரமத்தினையடுத்து, தமது வசிப்பிடங்களிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாகவும் அறியமுடிகிறது. 

இந்த நிலையிலேயே, மொஹிதீன் கிராமத்துக்கு குடிநீரை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய நீர்வழங்கல் அதிகார சபையினருக்கு அமைச்சர் ஹக்கீம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்போது அமைச்சருடன் தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் உயர் அதிகாரிகள், இறக்காமம் பிரதேச அரசியல்வாதிகள் என, பலர் வருகை தந்திருந்தனர்.

No comments

Powered by Blogger.