முஸ்லிம் தலைமைகளுடன் இணைந்து, நாம் இணக்கப்பாட்டிற்கு வந்தால் காரியம் கை கூடும் - சுமந்திரன்
நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டு இணைந்து ஆட்சி அமைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் கவனமாகக் கையாள வேண்டும். இப்படிப்பட்டதோர் சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச் செவ்வியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது-
கேள்வி: வட மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக்கியதில் உங்களுக்கு கணிசமான பங்கிருந்தது. அவரைத் தெரிவு செய்ததன் காரணமென்ன?
பதில்: நாம் வட மாகாண சபைத் தேர்தலை வெறுமனே மற்றொரு தேர்தலாகக் கருதிப் போட்டியிடவில்லை. நாம் வென்று ஆட்சியமைக்கக் கூடியதோர் தேர்தல் என்பதால் அதற்குத் தலைமை வேட்பாளராக யாவரும் மதிக்கக் கூடிய தகமையைப் பெற்ற, யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நபரை நியமித்தோம்.
கேள்வி: வட மாகாண சபை முதல்வராக விக்கினேஸ்வரன் தனது கடமையைச் சரிவரச் செய்திருக்கின்றாரா?
பதில்: நான் இது தொடர்பில் கட்சிக் கூட்டத்தில் பேசியதை பகிரங்கமாகப் பேசியதற்காக கட்சித் தலைமையால் கண்டிக்கப்பட்டிருக்கின்றேன். நான் இது மட்டில் கட்சித் தலைமையின் விதிப் படி, அதற்குக் கட்டுப்பட்டே நடக்க விரும்புகின்றேன்.
கேள்வி: அவரை விலக்குமாறு பகிரங்கமாகக் கேட்டிருந்தீர்களே?
பதில்: இல்லை. நடந்தது வேறு. தேர்தல் முடிந்து ஒரு மாத காலமாக முதலமைச்சர் தொடர்பில் நான் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. பலர் என்னிடம் கேட்ட போதும் நான் மௌனம் சாதித்தேன். செப்டம்பர் 11 நடந்த கட்சிக் கூட்டத்திலே தான் நான் எனது நிலைப்பாட்டைச் சொன்னேன். அதை அங்கிருந்த யாவரும் ஏற்றுக் கொண்டனர். யாரும் மறுக்கவில்லை. ஆனால், இந்த விடயத்தை நிதானமாகக் கையாளும் பொறுப்பை நாம் சம்பந்தன் ஐயாவின் கைகளில் கொடுத்தோம். கூட்டம் முடிவதற்குள் நான் பேசிய விடயம் ஊடகங்களில் கசிந்துவிட்டது. அதன் பின்னர் இப்படிச் சொன்னீர்களா என என்னிடம் வினவியவர்களிடம் நான் அதை மறுக்க முடியாது. அப்படி நான் அவுஸ்திரேலியாவில் சொன்ன பதிலே புயலாக உருவெடுத்தது. கட்சிக் கூட்டத்தில் பேசுவதற்கு எனக்கு பூரண உரிமை உண்டு.
கேள்வி: வட மாகாண சபை நிர்வாகம் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?
பதில்: நிர்வாகத்தின் மீது நிறையவே அதிருப்தி உண்டு. இவை தொடர்பில் முதலமைச்சருடன் இணைந்தும் தனித்தும் பல கட்சிக் கூட்டங்களில் நாம் பேசியிருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக வட மாகாண சபையின் மீது எமக்குப் பொறுப்பு உண்டு. நாம் நினைத்தது போன்று சபை திறம்பட இயங்கவில்லை என்பது யாவருக்கும் தெரிந்த உண்மை.
கேள்வி: இந்த அரசாங்கம் புதியதோர் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்தப் போவதாகச் சொல்லி வருகின்றது. இது தொடர்பில் தமிழ்த் தரப்பின் உள்ளீடு என்ன?
பதில்: தேர்தல் முறையிலோ, ஜனாதிபதி முறைமையிலோ மாற்றத்தை ஏற்படுத்த புதிய அரசியலமைப்பு அவசியமல்ல. அரசியலமைப்பின் சில அடிப்படைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் எமக்கும், அரசாங்கத்திற்கும் புரிதல் இருக்கின்றது. இந்த அரசியலமைப்பு வரைபில் எமது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
இது வரை அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால், எவ்வாறு இந்த அரசியலமைப்பினை நிறுவுவது என்பது தொடர்பில் திட்டங்கள் பிரேரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு அரசியலமைப்பு உருவாக்கத்திற்கென steering committee ஒன்று உருவாக்கப்படும். அந்தக் குழு தான் வரைபினை முன்னெடுக்கும். வரும் ஜனவரி தொடங்கி 6 – 12 மாத கால இடைவெளியில் இந்தச் செயன்முறை பூர்த்தியாக்கப்படும்.
நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டு இணைந்து ஆட்சி அமைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் கவனமாகக் கையாள வேண்டும். இப்படிப்பட்டதோர் சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே. நாம், முஸ்லிம் தலைமைகளுடன் இணைந்து ஒரு இணக்கப்பாட்டிற்கு வரும் பட்சத்தில் காரியம் கை கூடும். நாம் யதார்த்த பூர்வமாக நடக்க வேண்டும். சில சொற்பதங்களைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். எவரும் பீதியைக் கிளப்புவதற்கு இடமளிக்கக் கூடாது. யதார்த்தமாகச் செயற்பட வேண்டும்.
வரவிருக்கின்ற அரசியலமைப்பு மக்கள் முன் வைக்கப்பட்டு வெகுஜன வாக்கெடுப்பு மூலம் அனைத்து மக்களது அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதை நாங்களே கோரியிருக்கின்றோம். எமது நிலைப்பாடுகள் நாட்டில் நிச்சயம் பேசப்பட வேண்டும். ஏற்ற காலத்தில், ஏற்ற விதத்தில் வெளிப்படையாகவே பேசப்பட வேண்டும்.
Post a Comment