Header Ads



புதிய போர் விமானங்களை, வாங்குவது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு

சிறிலங்கா படைகளை வலுப்படுத்துவதற்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடந்து வரும் வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

“சிறிலங்காவுக்கு இரண்டு போர்க்கப்பல்களை இந்தியா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா விமானப்படைக்கு  புதிய போர் விமானங்களை வாங்குவது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உலகில் முன்னேறிய ஏனைய நாடுகளின் இராணுவத்துக்கு இணையாக சிறிலங்கா இராணுவத்தையும் முன்னேற்றுவதற்கான உதவியை வழங்க வேறு பல நாடுகளும் முன்வந்துள்ளன.

முன்னைய ஆட்சியில் இரவு ஓட்டப்பந்தயங்களுக்காக மணல்மூடைகளைச் சுமக்க வைத்த இராணுவத்தை, உலகில் முன்னேறிய படையாக மாற்றுவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

நாட்டின் பாதுகாப்பை ஒரு போதும், சீர்குலைக்க இடமளியோம். நாட்டின் இறைமை மற்றும் பூகோள ஒருமைப்பாடு என்பனவற்றைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.