Header Ads



யேமனில் போர் நிறுத்தம் அறிவித்த சவூதி அரேபியா - சுவிட்சர்லாந்தில் அமைதிப் பேச்சுவார்த்தை

யேமனில் சவூதி தலைமையிலான கூட்டுப் படை செவ்வாய்க்கிழமை காலை முதல் போர் நிறுத்தம் மேற்கொண்டதாக அறிவித்தது.

 யேமன் சண்டைக்குத் தீர்வு காண்பதற்காக, சவூதி கூட்டுப் படைக்கும், ஈரான் ஆதரவு ஹூதி கிளச்சியாளர்களுக்கும் இடையே ஸ்விட்சர்லாந்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐ.நா. தயாராகி வருகிறது.

 இந்த நிலையில் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 முன்னதாக, சவூதி கூட்டுப்படை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

 யேமனில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் மேற்கொள்வதாக முன்னர் அறிவித்திருந்தோம். 

 எனினும், யேமன் அதிபர் மன்சூர் ஹாதியின் வேண்டுகோளுக்கிணங்க, செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே போர் நிறுத்தம் தொடங்கும்.

 ஒப்பந்தத்தை மீறி எங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தினால் திருப்பித் தாக்குவோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 அரேபிய தீபகற்பத்திலேயே மிகவும் வறிய நாடான யேமனில், தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 அவர்களில் 80 சதவீதம் பேருக்கு உடனடி நிவாரண உதவிகள் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அந்த நாட்டு மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிப்பதற்கு வசதியாக யேமனில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

 இந்த நிலையில் சவூதி அரேபியா செவ்வாய்க்கிழமை முதல் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.