Header Ads



முஸ்லிம்கள் தொடர்பில் றிஷாத் + மாவை பேச்சு, இணைந்து செயற்படவும் தீர்மானம்

 வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் உட்பட தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் நீண்ட கால பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இரண்்டு சமூகங்களின் அரசியல் தலைமைகளும் ஒருமித்து செயலாற்றுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தலைமையிலான துாதுக்குழுவுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான துாதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (19) பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வடபுல முஸ்லிம்கள் மீளகுடியேறுவதற்கு தடையாகவுள்ள காணிப்பிரச்சினை தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அங்கு விபரித்தார். இந்தப் பிரச்சினையை கையாளும் வகையில் இரண்டு கட்சிகளைச் சேர்ந்த  முக்கியஸ்தர்களை உள்ளடக்கிய குழுவொன்று அமைப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தின் பிரச்சினைகளையும் தனித்தனியாக கையாளும் வகையில் அமைக்கப்படவுள்ள உபகுழுக்களின் பிரதிநிதிகள் அந்தந்த பிரதேசத்திலுள்ள காணிகளை அடையாளம் கண்டு அந்த மக்களுடன் கலந்து பேசி அறிக்கைகளை தயாரிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இரண்டு கட்சிகளின் அரசியல் முக்கியஸ்தா்களும் தொடர்ச்சியான சந்திப்புக்களை ஏற்படுத்தி பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதெனவும் உடன்பாடு கண்டனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மாவை சேனாதிராசா எம்பி கூறியதாவது:- தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சிறுசிறு பிரச்சினைகளை களைவதற்கான திருப்பமாக இந்த சந்தர்ப்பம் அமைந்துள்ளது.

இந்த கலந்துரையாடலுக்கு வழியேற்படுத்தித்தந்த அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு நன்றியை தெரிவிக்கின்றோம்

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பாரிய பிரச்சினையாக இருப்பதை நாம் அறிவோம். முஸ்லிம்கள் மீண்டும் தமது பிரதேசத்தில் குடியேறுவதை மனதார வரவேற்று அவர்களை அரவணைத்தவர்கள் நாங்கள்.

தமிழர்களும் முஸ்லிம்களும் பொதுவானன பிரச்சினைகளில் ஒன்றிமூைலமே இணைந்து தீர்வு காண்பதன் மூலமே நிம்மதியாக வாழ முடியுமென்றார். அமைச்சர் றிஷாத் பதியுதீன் இங்கு கூறியதாவது நாம் ஒருபோதும் பிரிந்து வாழ முடியாது எம்மிடையே இருக்கும் சிறுசிறு பிரச்சினைகளை பெரிது படுத்தாது கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்டு இணக்கப்பாட்டுடன் வாழ்வோம்.

முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை அவசரமாக முடிவுகட்டப்பட வேண்டிய ஒன்று. தமிழ்- முஸ்லிம் நல்லுறவுக்கு இந்தப்பிரச்சினைக்கு முதலில் முடிவு கட்ட வேண்டும் எதிர்காலத்தில் இனப்பிரச்சினை தீர்்வு, எல்லை நிர்ணயம், தேர்தல் முறை மாற்றம், அரசியலமைப்பு மாற்றம் போன்றவற்றுக்கும் நாம் இணைந்து செயற்படுவதே சாலச் சிறந்தது என்றார். இந்தக் கூட்டத்தில் எம்பிக்களான எம்.ஏ.சுமந்திரன், சரவணபவன், கலாநிதி சிவமோகன், எம்.எச்.எம்.நவவி, எம்.எம்.எம்.மஹ்ருப், பிரதியமைச்சர் அமீர் அலி, கலாநிதி அனீஸ், சுபியான் மெளலவி, மாகாண சபை உறுப்பினர் ஜனுாபர் ஆகியோர்களும் பேசினர்.

எம்பிக்களான துரைரெட்ணசிங்கம், இல்யாஸ் மற்றும் எம்.எம்.அமீன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.