Header Ads



சுனாமியும், அல்லாஹ் போதுமானவன் என சமாதானப்படுத்திக் கொண்டமையும்..!

-எம்.எம் பாஸில்
Lecturer in Political Science
South Eastern University of Sri Lanka-

சுனாமி உணர்த்திய வாழ்க்கை

இயற்கை அனர்த்தம் மிகக் கடுமையானதென்பதனை அறிந்திருந்த போதிலும் 2004ஆம் ஆண்டின் சுனாமி இப்படிக் கொடுமையானதாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்நிகழ்வு எனக்கும் எனது குடும்பத்திற்கும் பொருள் ரீதியான சேதத்தை மாத்திரமல்லாது நிரந்தரமான சோகத்தையும் ஏற்படுத்தியது. நான் அன்று காலையில் சம்மாந்துறை விவசாயிகளுக்கு மனித உரிமைகள் தொடர்பான ஒரு விளக்கவுரையினை வழங்குவதற்கு தயார்படுத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். சுமார் 8.50 மணியளவில் அவலக் குரல்கள் கேட்டன. சனம் எனது இருப்பிடத்தைத் தாண்டி 'கடல் வருகிறது' என அலறிக் கொண்டு ஓடிச்சென்ற சத்தத்தை உணர்ந்தேன். 

எனது மனைவியின் தாயார் 'கடல் வருகிறது தப்பிச் செல்வோம் வாருங்கள'; என்று எனது வீட்டின் வாயிலில் சப்தமிட்டார். 'இது என்ன புதுக்கதை' என எனது மனைவியிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்து பார்த்த போதுதான் நிலைமை விளங்கியது. எனது வீட்டு முற்றத்தில் நீர் பரவுவதை அவதானித்தேன். உடனே மனைவியை 'வெளியேறுங்கள்' என்று சொல்லியவனாக எனது கல்வித் தகைமைகள் உள்ளடங்கிய கோவையினையும் என்னிடம் திருத்துவதற்காகத் தரப்பட்டிருந்த பரீட்சை விடைத்தாள்களையும் கையில் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற முனைந்தேன். உடனே எனது மனைவி 'என்னைப் பார்க்கப் போகிறீர்களா அல்லது உங்களது பையில்களைப் பாதுகாக்கப் போகிறீர்களா?'  எனக் கேட்டு விட்டு 'அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு வாருங்கள்' எனக் கதறியழுதார். உடனே எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு வெளியே ஓடினோம். வீட்டைப் பூட்டவோ மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொள்ளவோ தாமதம் இருக்கவில்லை. நாங்கள் வேகமாக கடலின் எதிர்த்திசையை நோக்கி முன்னேற ஆரம்பித்தோம். கடல் நீர் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. நாங்கள் ஓடும்போது மதில்கள் இடிந்து வீழ்ந்தன. திரும்பிப் பார்த்தேன் எனக்கு 50 மீற்றர் தூரத்தில் முச்சக்கர வண்டியொன்று நீரில் அடிபட்டு வந்து கொண்டிருந்தது. எங்கள் அயலவர்கள் எல்லோரும் நாங்கள் வெளியேற முன்னரே தப்பிச் சென்றுவிட்டனர்.

200 மீற்றருக்கு அப்பால் இருந்த எனது தாயின் வீட்டை நோக்கி நாங்கள் ஓடினோம். எனது தாய், தங்கைமார், தம்பி ஆகியோரை அழைத்துக் கொண்டு பிரதான வீதிக்குச் சென்றேன். எனது தந்தை மாத்திரம் வீட்டில் இருக்கவில்லை அவர் பொழுது போக்கிற்காகக் கடற்கரை ஓரத்திற்குச் சென்றதாக தாயார் அழுதவாறே கூறினார்.

சில நிமிடங்களில் பிரதான வீதியைச் சென்றடைந்த நாங்கள், இடம்பெயர்ந்தோர் என்ற அடிப்படையில் எங்கு சென்று தற்காலிகமாக தரிப்பது என்பது ஒரு சங்கடமான விடயமாக மாறியது. பாதிக்கப்பட்டவர்கள் எனது நண்பர்கள், உறவினர்கள் அனைவரதும் வீடுகளில் தஞ்சம் புகுந்திருந்தனர். நான் செய்வது அறியாது திகைத்தேன். பல இடங்களுக்கும் அலைந்தேன். எங்களிடம் குடிப்பதற்குத் தண்ணீரோ அல்லது சாப்பிட உணவோ இருக்கவில்லை. இறுதியில் சில மணி நேரங்களின் பின்னர், உறவினர் ஒருவரின் வீட்டில் எனது குடும்பத்தினரை தற்காலிகமாக தரிக்கச் செய்தேன். வெளியூர் நண்பர்களின் வீட்டிற்குச் செல்லலாம் என முயன்ற போது வாப்பா இல்லாமல் தன்னால் எங்கும் வர முடியாது என்று எனது தாயார் மறுத்துவிட்டார். உடனே வாப்பாவைத் தேடும் பணியை ஆரம்பித்தேன். 

இதனிடையே என் மனதை வெகுவாகப் பாதித்த பல்வேறு காட்சிகளைக் கண்டேன். தப்பித்து வந்த பலர் பாரிய காயங்களுடன் மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் அழுது புலம்பினர். பல தாய்மார் கதறி அழக் கண்டேன். ஒருவர்இ எனது குடும்பமே அழிந்து விட்ட தென்றார். மற்றவர் தம் இரண்டு குழந்தைகளையும் கையில் பிடித்து இழுத்து வருகின்ற போது கடல் இரு குழந்தைகளையும் என் கண் முன்னே பறித்துச் சென்று விட்டது என்றார். கதறிக்கொண்டு வீதியின் குறுக்காக ஓடிக்கொண்டு அங்கலாய்த்தார். 

நான் எனது மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். எனது தந்தை சென்றதாகச் சொல்லப்பட்ட அயல் கிராமமான கல்லாறு எனும் ஊரின் கடற்கரையை அடைவதற்கு முயற்சித்தேன். ஆனால் அயற்கிராமங்களின் பிரதான வீதிகளைக் கூட ஊடறுக்க முடியவில்லை. சுனாமிப் பேரலைகள் நீலாவணை, கல்லாறு ஆகிய ஊர்களின் பிரதான வீதிகளை ஊடறுத்து மின் கம்பங்களை அடியோடு சாய்த்திருந்தது. ஊரவர்கள் போக வேண்டாம் என என்னைத் தடுத்து நிறுத்தினர். எனது நிர்க்கதியான நிலையினை எண்ணி மனம் வருந்தினேன். நேரம் செல்லச் செல்ல எனது தந்தை உயிர் தப்பியிருக்க முடியாது என்ற எண்ணம் என்னுள்ளே வலுப் பெற ஆரம்பித்தது. அவர் இல்லாத வாழ்க்கையைப் பற்றி என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஆனாலும் எல்லாவற்றுக்கும் 'அல்லாஹ் போதுமானவன்' என நினைத்து என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். 

நேரம் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட மதிய வேளையாகிற்று. ஆனால் எனது தந்தை பற்றி எத்தகவலும் கிடைக்கவில்லை. பலரிடம் விசாரித்தேன். அதில் பலர் பதில் கூட கூறவில்லை. அடுத்தகட்ட நகர்வைச் செய்ய முடியாது போன நான் எனது குடும்பத்தாரிடம் மீண்டும் வந்தேன். அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு எனது வீட்டை நோக்கிச் செல்ல முனைந்தேன். இவ்வேளை யாரும் யாரைப் பார்ப்பதற்கும் ஆறுதல் கூறுவதற்கும் அரவணைப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கவில்லை. 

எனது மருதமுனைக் கிராமம் சுனாமியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இலங்கைத் தாயின் ஒரு பிரதேசமாக மாறியது. கடற்கரையிலிருந்து சுமார் 600 மீட்டர் தூரம் வரை சுனாமி அலைகளால் கழுவிச் செல்லப்பட்டு பதம் பார்க்கப்பட்ட ஊராக மாறியது. கிட்டத்தட்ட 1000 பேரின் உயிர் காவு கொள்ளப்பட்டது. கடல் நீர் மெதுவாக வடிந்து கடலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. தண்ணீரின் ஊடாக நடந்து எனது வீட்டுப் பகுதியை அடைந்தேன். இடம்பெற்றிருந்த அழிவுகளையும் இழப்புக்களையும் என்னால் வார்த்தைகளால் கூற முடியாத அளவுக்கு மிகக் கொடுரமான அழிவுகளைக் கண்டேன். சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கில் இறந்தவர்களின் உடல்களைப் பார்த்தேன். முடிந்தவரைக்கும் மீட்புப் பணியாளர்களுடன் இணைந்து பல சடலங்களைக் கரை சேர்க்க உதவினேன். வீடுகளும் கட்டடங்களும் வீதிகளும் சிதைந்து போய் இருந்தன. எனது குடியிருப்பும் எனது குடும்பத்தினரின் வீடுகளும் பாதிக்கப்பட்டிருந்ததுடன் வீட்டுக்குள்ளிருந்த அனைத்துப் பொருட்களையும் கடல் நீர் அடித்துச் சென்றிருந்தது. 

மதிய நேரம் மெதுவாக நகர்ந்து மாலை நேரம் ஆரம்பித்தது. ஆனால் சூரியன் உச்சம் கொடுக்கவில்லை. வானத்தில் காரிருள் மேகங்கள் காட்சியளித்தன. மழை பொழிந்து கொண்டே இருந்தது. அயற் கிராமங்களுக்குச் செல்வதற்கான வீதிகளில் காணப்பட்ட தடைகள் மீட்புப் பணயாளர்களால் சிறிதளவு அகற்றப்பட்டுள்ளதாக அறிந்தேன். எனது மச்சான் சஹுர்தீன் டொக்டர் அவர்களை அழைத்துக் கொண்டு எனது தந்தையின் உடலைத் தேடி அலைந்தோம். சுமார் 650இற்கும் மேற்பட்ட இறந்த உடல்களை ஒவ்வொன்றாகப் பார்வையிட்டோம். ஆனால் எனது தந்தையின் உடல் கிடைக்கவில்லை. இரவாகி விட்டதால் எனது கிராமத்திற்குத் திரும்பினேன். 

எனது குடும்பத்தை மீண்டும் வந்தடைந்த நான் சரியாக உறங்குவதற்குக் கூட வாய்ப்பில்லாமல் நுளம்புக் கடிக்கு மத்தியில் ஓர் ஓரத்தில் தரித்திருந்தேன். அது சோகம்  நிறைந்த மிக நெடிய இரவாகக் காணப்பட்டது. எப்போது விடியும் எனக் காத்திருந்த எனக்கு பொழுது புலர்ந்து அடுத்த நாள் ஆரம்பித்த போது இன்றாவது எனது தந்தையைத் தேடிக் கண்டு பிடித்து விடலாம் என்ற தன்னம்பிக்கை வலுப் பெற்றது. மீண்டும் தேடச் சென்றேன். ஆனால் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. 

இந்நிலையில் காலை எட்டு மணி இருக்கும், தமிழ் சகோதரர் ஒருவரூடாக ஒரு செய்தி வந்தடைந்தது. அச்சோகச் செய்தியினை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எனது தந்தையின் உடல் துறைநீலாவணை ஆற்றில் மிதக்கிறது என்பதே அச்செய்தியாகும். உடனே மீட்புப் பணியாளர்களுக்குச் செய்தியை அனுப்பி விட்டு ஆற்றங்கரையை நோக்கிச் சென்றேன். தொடர்ந்து அவர்கள் வந்து சேர்ந்து விட்டனர். துறை நீலாவணை தமிழ் சகோதரார்களும் மீட்புப் பணியாளர்களும் இணைந்து எனது தந்தையின் உடலைக் கரை சேர்த்து ஊருக்குக் கொண்டு வந்தோம். பின்னர் அவரது பிரேதத்தை(மையத்தை) சம்மாந்துறைக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தோம். 

இவ்வாறு நான் பாதிக்கப்பட்டிருந்த வேளையில், எனது தொழில் சார் சக நண்பர்கள் என்னை ஊருக்குத் தேடி வந்து விலை மதிக்க முடியாத உதவிகளைச் செய்தனர் என்பது என் மனதை விட்டு அகலாத நினைவுகளாகும். மூன்று தினங்களுக்கு மாற்றுவதற்குக் கூட உடையில்லாமல் ஒரே உடையுடன் அலைந்து திரிந்த எனக்கு உடையும் உணவும் பணமும் தந்து உதவினார்கள். இந்தச்சம்பவம் உண்மையான நண்பர்கள் யார் என்பதை எனக்கு விளக்கியது. 

சுனாமி போன்ற இயற்கை அநர்த்தங்கள் உயிர்இ உடல்இ உளஇ பொருள் ரீதியான அழிவுகளை ஏற்படுத்துகின்ற போதிலும் அல்லாஹ்வின் உதவியும் தன்னம்பிக்கையும் நல்ல நண்பர்களின் அரவணைப்பும் இப்பாதிப்புக்களிலிருந்து மீட்சி அடைய வழிவகுக்கின்றது. மொத்தத்தில்இ இச்சம்பவம் எனக்கு வாழ்க்கை பற்றிய தத்துவத்தை உணர்த்திற்று.

No comments

Powered by Blogger.