மைத்திரி வந்தபோது, துப்பாக்கியுடன் நின்றவர் விடுதலை
வத்திக்கான் சென்று நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமானநிலைய விருந்தினர் வரும் பகுதியில் வைத்து துப்பாக்கியுடன் நபர் ஒருவர் நெருங்கியதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நேற்று புதன்கிழமை முற்பகல் 9 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தார்.
ஜனாதிபதியின் விமானம் தரையிறங்கிய வேளையில் முக்கிய விருந்தினர்கள் வரும் பகுதியில் பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக்கொண்டிருந்த ஒருவரை விமானநிலையப் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், அவரது கால் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மில்லி மீற்றர் 9 ரக கைத்துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதன் உண்மைத்தன்மை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
"இவ்வாறான சம்பவங்கள் எதுவும் பொலிஸ் தலைமையகத்துக்குப் பதிவாகவில்லை. இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறும் பட்சத்தில் எமக்கு உடனடியாக அறிவிக்கப்படும்.
எனினும், குறிப்பிடுவது போன்று பொலிஸார் எவரையும் கைது செய்யவில்லை. பரப்பப்பட்டு வரும் செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. இது வதந்தியாக இருக்கலாம் என்று தெரிவித்தது.
இதேவேளை, துப்பாக்கி வைத்திருந்த சந்தேக நபர் சிவில் விமானசேவை அதிகாரி என்று தெரியவந்துள்ளதாகவும், அவரை விசாரணை இன்றி விடுதலை செய்யுமாறு சிவில் விமான சேவை உயர்பீடத்திலிருந்து பொலிஸாருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ஆனந்த விமலசேன கருத்துத் தெரிவிக்கையில்,
"கைதுசெய்யப்பட்ட நபர் எமது நிறுவனத்தில் பணிபுரிபவர். ஜனாதிபதி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
எனினும், ஜனாதிபதிக்கு அச்சுறுத்தலான விதத்தில் மர்ம நபர் நடமாடியதாகப் பரப்பப்பட்டு வரும் செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை.
வழமையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய இவ்வாறான பரிசீலனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கைது செய்யப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்'' என்றார்.
இதேவேளை, இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஜுலை 25ஆம் திகதி ஜனாதிபதி கலந்துகொண்ட கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலய பரிசளிப்பு விழாவின்போது, மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தன.
அதேபோன்று, ஏப்ரல் 25ஆம் திகதி அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நாமல் ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் பாதுகாப்புத் தடைகளையும் மீறி கைத்துப்பாக்கியுடன் கூட்டத்துக்குள் நுழைய முற்பட்டிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலின்போதும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததுடன், அதனை உயர்மட்ட அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment