Header Ads



நியாயம் கேட்கும் ஹிஸ்புல்லா

காத்தான்குடி நகர சபை 12 வட்டாரங்களாக பிரிக்கப்பட வேண்டும் என மீள் குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழுவினரிடம் அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வட்டாரங்கள் பிரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் காத்தான்குடி நகர சபை 10 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இது கடந்த அரசாங்கத்தின் போது காத்தான் குடி நகர சபை 12 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் 28,000 வாக்காளர்களையும் சுமார் 48000 மக்கள் தொகையும் கொண்ட காத்தான்குடி நகர சபையை ஆகக் குறைந்தது 12 வட்டாரங்களாக பிரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் பல பிரதேசங்களிலும் 14,000 மக்கள் தொகையினை கொண்ட பிரதேசங்கள் 11 மற்றும் 12 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு உறுப்பினர் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனவே அதிக மக்கள் தொகையினை கொண்ட காத்தான்குடி நகரசபை ஆகக் குறைந்தது 12 வட்டாரங்களாக பிரிக்கும் பட்சத்தில் மாத்திரமே இலகுவாக தங்களுடைய பணிகளை முன்னெடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை தமது கோரிக்கைகளை கருத்திற் கொண்டு காத்தான்குடி நகர சபை 12 வட்டாரங்களாக பிரிப்பதற்கு எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.