சுலைமான் என்ற அகதியின் மனிதாபிமானம், கண்ணீர் விட்டழுத ஜேர்மன் தம்பதி..!
ஜேர்மனி நாட்டில் கடுமையான பசியோடு ஹொட்டலை தேடி அலைந்த முதியவர்கள் இருவருக்கு அந்நாட்டில் புகலிடம் கோரி காத்துள்ள அகதிகள் கொடுத்த இன்ப அதிர்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு பவேரியாவில் உள்ள Bamberg நகரை சேர்ந்த Gabriele Starz மற்றும் Hans Eppinger என்ற இரண்டு வயதான தம்பதியினர் அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்பவர்கள்.
சில தினங்களுக்கு முன்னர், Zapendorf நகருக்கு சென்று இருந்த போது, திடீரென கடுமையான பசி எடுத்துள்ளது. ஆனால், அருகில் ஹொட்டல் எதுவும் அவர்களின் கண்களுக்கு புலப்படவில்லை.
சிறிது நேரம் வீதியில் பசியோடு ஹொட்டலை தேடி வந்த இருவர் ஓரிடத்தில் Brewery-Restaurant Hennemann என்று பெயருடைய விடுதி ஒன்றை கண்டுள்ளனர்.
இந்த விடுதி ஹொட்டல் தான் என தவறாக நினைத்த இருவரும் உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்போது, ஈராக் நாட்டை சேர்ந்த Kawa Suliman என்ற பெயருடைய நபர் அவர்களை எதிர்க்கொண்டுள்ளார்.
விடுதிக்குள் வந்தவர்கள் யார் என அடையாளம் காணப்படாமல் இருந்தாலும், இருவரும் மிகவும் பசியாக இருக்கிறார்கள் என்பதை அவர் உணர்ந்து இருவரையும் உள்ளே அழைத்து சென்றுள்ளார்.
விடுதிக்குள் நுழைந்ததும் இருக்கைகளை காட்டி அவர்களை அமர சொல்லியுள்ளார்.
ஆனால், அங்குள்ள இருக்கைகள் பழுதாகியும் பொருத்தமில்லாமல் இருந்ததால் அது உண்மையிலேயே ஹொட்டல் தானா என முதியவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், அவர்களுக்கான முட்டை, ரொட்டி துண்டுகள், ஜாம் உள்ளிட்ட உணவை அங்கிருந்த 3 நபர்கள் எடுத்து வந்து பரிமாறியுள்ளனர்.
உணவை சுவைத்த முதியவர்கள் இருவரும் திருப்தியோட எழுந்து கை கழுவி விட்டு வந்து ‘உணவிற்கான கட்டண சீட்டை கொண்டு வாருங்கள். பணம் தருகிறேன்’ என கூறியுள்ளனர்.
’’நீங்கள் நினைப்பது போல் இது ஹொட்டல் அல்ல. இது அகதிகள் தங்கும் முகாம்’’ என அந்த நபர்கள் அமைதியாக பதில் அளித்துள்ளனர்.
இதனை கேட்ட வயதான தம்பதியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.
எவ்வித தொடர்பும் இல்லாத இந்த அகதிகள் தமக்கு உரிய நேரத்தில் உணவு அளித்து கரிசனத்துடன் உபசரித்ததை நினைத்து இப்போதும் ஆனந்த கண்ணீர் வடிப்பதாக அந்த முதியவர்கள் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளனர்.
Post a Comment