Header Ads



ஒரு நடுநிலையாளனான என்மீது, நம்பிக்கை கொள்ள வேண்டும் - ரவூப் ஹக்கீம்

கல்முனையில் வாழும் எந்தவொரு சமூகத்துக்கும் துரோகம் இழைப்பதற்காக ‘கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம்’ உருவாக்கப்படவில்லை. என்பதனால் ஒரு நடுநிலையாளனாக இத் திட்டத்தை செயற்படுத்த முன்வந்துள்ள தன் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் கல்முனை வாழ் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்முனை நகர அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக  இதுவரை வெளிவந்த அனைத்து அறிக்கைகளும் போலியானவை எனத் தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையினால் நியமிக்கப்படும் விசேட குழுவினாலேயே இத்திட்டம் குறித்த இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தமிழ் விவசாயிகளையோ அல்லது அவர்களின் காணிகளையோ இலக்கு வைத்த திட்டமல்லவென்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

கல்முனை மாநகர சபையில் நகர அபிவிருத்தி திட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில், தமிழ் மக்களிடம் நிலவும் சந்தேகங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து தெளிவுப்படுத்தும் விசேட சந்திப்பு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கல்முனை மாநகரில் நடைபெற்றது. இதன் போதே அமைச்சர’ ஹகீம் தமிழ் பிரதிநிதிகளிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த சந்திப்பில் கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் எச். எம்.எம். ஹரீஸ் கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏகாம்பரம் தலைமையிலான தமிழ் உறுப்பினர்களான ஜெயக்குமார், விஜயரட்ணம், கமலதாஸ் ஆகியோர் கோவில் அறங்காவலர்கள், சிறு சமூக பிரதிநிதிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சருடனான இச்சந்திப்பின் போது இரு தரப்பினருக்குமிடையிலான பேச்சுவார்த்தை மற்றும் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள், உறுதிமொழிகள் என்பன குறித்து பிரதியமைச்சர் ஹரீஸை தொடர்பு பொண்டு கேட்டபோதே அமைச்சர் ரவூப் ஹகீம் முன்வைத்த விளக்கம் தொடர்பில் பிரதியமைச்சர் ஹரீஸ் விளக்கமளித்திருந்தார். இப்பேச்சுவார்த்தை தொடர்பில் பிரதியமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவித்ததாவது;-

கல்முனன நகர அபிவிருத்தித் திட்டம் குறித்து கடந்த காலங்களில் வெளிவந்த அறிக்கைகள் போலியானவை. அதற்கு தான் பொறுப்பானவன் அல்ல. ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை நியமிக்கும் விசேட குழுவே இதுகுறித்த இறுதி தீர்மானம் மேற்கொள்ளும்.

இந்தக் குழுவில் தமிழ் மக்கள் முன்மொழிகின்ற நிபுணர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் அங்கம் வகிப்பர். இக்குழு எடுக்கும் தீர்மானமே கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பிலான இறுதித் தீர்மானமாக இருக்கும் என்றும் அமைச்சர் ஹக்கீம் இதன் போது தெரிவித்ததாக பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இதுவரையில் எந்தவொரு திட்டமிடலோ அல்லது வரைபடமோ முன்னெடுக்கப்படவில்லை. என சுட்டிக்காட்டிய அமைச்சர், இதற்காக நியமிக்கப்படும் குழு மக்கள் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுக்கும் என்றும் கூறினார்.

நகர அபிவிருத்தித் திட்டம் என்பது வெறுமனே குடியிருப்புத் திட்டமல்ல என விளக்கமளித்த அமைச்சர், பொதுமக்களின் தேவைக்காக அரசாங்கத்தினால்முன்னெடுக்கப்படும். பூங்கா, விளையாட்டு மைதானம். கலாசார மண்டபங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டம் என்றும் அவர் விளக்கமளித்தார்.

கல்முனை பிரதேசத்தின் அபிவிருத்தியில் சர்வதேச நாடுகள் அக்கறை செலுத்தி வரும் நிலையில் தமி்ழ், முஸ்லிம் மக்கள் இது போன்ற சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கல்முனையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களுடன் தொடர்பற்றவன் என்ற வகையில் நான் இத்திட்டம் குறித்து நடு நிலையாளனாகவே செயற்பட வந்துள்ளேன்.

இதனால் எந்தவொரு சமூகத்துக்கும் நான் துரோகம் இழைக்கமாட்டேன். இப்பிரதேச மக்களுக்கு பெருமை சேர்க்க நாம் இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதன்மூலம் இப்பிரதேச மக்களுக்கு சமமான பொருளாதாரம் மற்றும் சம அந்தஸ்துகளுக்கான வாய்ப்பு கிட்டும்.

எனவே அனைவரும் இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். இச்சந்திப்பில் கலந்து கொண்ட விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், இத்திட்டம் மூலம் தமிழ் விவசாயிகள் அல்லது தமிழர்களின் காணிகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. என இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினர்.

எனவே இது தமிழ் விவசாயிகள் மற்றும் தமிழர்களின் காணிகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் திட்டம் அல்ல. கல்முனையில் நகர அபிவிருத்தி திட்டம் ஒன்றை உருவாக்குவதாக பிரதமர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இம்முறை வரவு- செலவுத் திட்டத்தில் அதற்கான நிதி ஒதுக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.