ஹிருணிகாவின் டிபென்டர் விவகாரம் - பொலிஸாரின் விளக்கம்
தெமட்டகொடை பகுதியில் 34 வயதான ஒருவரைக் கடத்தி, தாக்கியதோடு, அநாதரவாக விட்டுச் சென்ற அறுவர் பயணித்ததாக கூறப்படும், டிபென்டர் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமானது எனவும் தெரியவந்துள்ளது.
சுமார் 12 நாட்களுக்கு முன்னதாக குறித்த டிபென்டர் அவரது பெயரில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சம்பவத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை பொலிஸில் ஒப்படைப்பதாகவும் ஹிருணிகா குறிப்பிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்தக் கடத்தலுடன் பாராளுமன்ற உறுப்பினருக்கு தொடர்பிருப்பதாக தெரியவரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் நேற்றையதினம் சந்தேகநபர்களை பொலிஸில் ஒப்படைப்பதாக கூறப்பட்டது, பின்னர் இன்று காலை அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டது, எனினும் இதுவரை அவர்கள் சரணடையவில்லை, எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதுஎவ்வாறு இருப்பினும் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பட்சத்தில் அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment