மகிந்தவை கைதுசெய்ய முயன்ற சந்திரிக்கா, தடுத்துநிறுத்திய சரத்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைது செய்யப்படுவதனை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தடுத்தார் என முன்னாள் இத்தாலிக்கான தூதுவர் ஹேமந்த வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார். சுனாமி நிதி மோசடி தொடர்பிலான வழக்கில் மஹிந்தவை கைது செய்ய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முயற்சி செய்தார் என தெரிவித்துள்ளார்.
மஹிந்தவிற்கு மிக நெருக்கமான சீ.ஆர். டி சில்வா சட்ட மா அதிபராக கடமையாற்றிய போதிலும் கைது தொடர்பான விபரங்கள் இறுதி நேரம் வரையில் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவர் சரத் கொஹன்காகே இந்த விடயத்தை தமக்கு அறிவித்ததாகவும் தாம் இது குறித்து மஹிந்தவிற்கு எச்சரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த கைது செய்யப்படுவதனை அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தடுத்து நிறுத்தியதாகவும், அவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தால் மஹிந்தவின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தகுதியானவர்கள் இருந்த போதிலும் சரத் என் சில்வாவை சந்திரிக்கா பிரதம நீதியரசராக நியமித்தார் எனவும், நீதிமன்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அவ்வாறு அவர் சரத் பொன்சேகாவை நியமித்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2005ம் ஆண்டில் மஹிந்தவிற்கு தாம் ஆதரவு வழங்கியதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிக்கக்கூடிய ஆற்றல் மஹிந்தவிடம் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்தக் காலப்பகுதியில் புலிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்புகளைப் பேணி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
யுத்த நிறைவின் பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளாக மஹிந்த ராஜபக்ஸ நல்லாட்சிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.கடந்த ஆறு ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு பாரியளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோல்வியைத் தழுவியமை வரவேற்கப்பட வேண்டியது எனவும், வெற்றியீட்டியினால் மன்னராட்சி நிலைமைக்கு இலங்கைக்கு தள்ளப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment