Header Ads



"முஸ்லிம்கள் குறித்த எனது கொள்கை தவறாக இருக்கலாம், அதைப் பற்றிக் கவலையில்லை"

 அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வுக்கு டிரம்ப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

 இதுகுறித்து டிரம்ப்பின் பிரசார அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 அமெரிக்காவில் மத பயங்கரவாத நிலவரம் குறித்து மக்கள் பிரதிநிதிகள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

 அதுவரை, நாட்டுக்குள் முஸ்லிம்கள் வருவதற்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும்.

 "பியூ' ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வு அறிக்கைகளின்படி, பெரும்பாலான முஸ்லிம் மக்கள் அமெரிக்கர்களை வெறுக்கிறார்கள்.

 அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்துவது உலகளாவிய மதப் போரின் ஒரு அங்கம் என ஆய்வில் கலந்து கொண்ட 25 சதவீத முஸ்லிம்கள் கூறியுள்ளனர். எனவே அவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படக் கூடாது என்று டிரம்ப் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தெற்கு கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசியதாவது:

 அமெரிக்காவில் மத பயங்கரவாதம் தலைதூக்கி வருகிறது.

 அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நியூயார்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதலைப் போன்ற மேலும் பல பயங்கரவாதத் தாக்குதல்கள் அமெரிக்க மண்ணில் நிகழ்த்தப்படும். இந்தச் சூழலில் நாட்டுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்குத் தடை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றார் டிரம்ப்.
ஊடகங்கள் எதிர்ப்பு 

 டொனால்டு டிரம்ப்பின் இந்தக் கருத்துக்கு ஊடகங்களும், அமெரிக்க முஸ்லிம் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

 எனினும், அவற்றை அலட்சியம் செய்த டிரம்ப், ""எனது கருத்திலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. அசரமைப்புச் சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என ஊடகங்கள் விரும்புகின்றன. நான் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிப்பட வேண்டும் என விரும்புகிறேன்'' என்று சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

 மேலும், ""முஸ்லிம்கள் குறித்த எனது கொள்கை அரசியல்ரீதியில் தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. நமது நாட்டுக்குள் வருபவர்கள் நம்மை விரும்புகிறார்களா, வெறுக்கிறார்களா என்பதே தெரியாமல் அவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது'' என்று டிரம்ப் தெரிவித்தார்.

 தனது கொள்கைகள் வெளிநாடுகளிலிருந்து அமெரிக்கா வரும் முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், அமெரிக்க முஸ்லிம்களுக்குப் பொருந்தாது எனவும் அவர் கூறினார்.

அதிபர் பதவி போட்டியாளர்கள் கண்டனம்

 டொனால்டு டிராம்ப்பின் கருத்து கண்மூடித் தனமான வெறுப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. முஸ்லிம்களுக்குத் தடை விதிப்பதால் நமது நாட்டின் பாதுகாப்பு அதிகரிப்பதற்குப் பதில் குறையவே செய்யும்.
 ஹிலாரி கிளிண்டன், 
 ஜனநாயகக் கட்சி
 டொனால்டு டிரம்ப்பின் பேச்சு பிதற்றலாக உள்ளது. முஸ்லிம்கள் குறித்த அவரது "கொள்கை'யை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
 ஜெப் புஷ், 
 குடியரசுக் கட்சி
 பாதுகாப்புக்காக முஸ்லிம்களுக்குத் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை. அந்த யோசனை மிகவும் அசட்டுத்தனமானது. அதனால் எந்தப் பலனும் கிடைக்காது.
 கிறிஸ் கிறிஸ்டி, 
 குடியரசுக் கட்சி
 அமெரிக்க வரலாற்றில், தன்னல அரசியல்வாதிகள் பலர் நிறம், இனம், பாலினம், பூர்விகம் அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்தனர். தற்போது டொனால்டு டிரம்ப் மதத்தின் மூலம் மக்களைப் பிரிக்க முயற்சிக்கிறார்.
 பெர்னி சாண்டர்ஸ், 
 ஜனநாயகக் கட்சி

No comments

Powered by Blogger.