Header Ads



வசீம் தாஜூடீன் கொலை காணொளி, பல காட்சிகள் அழிப்பு, உதவியை நாடும் பொலிஸ்

பிரபல ரகர் விளையாட்டு வீரர் மொஹமட் வசீம் தாஜூடீனை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பான சில காணொளிகள் ஆய்வுகளுக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக அப்போதைய காவற்துறையினர் சரியான முறையில் விசாரணைகளை நடத்தாத காரணத்தினால், தற்போது நடத்தப்படும் விசாரணைகளில் பல சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2012 ஆம் ஆண்டு தாஜூடீன் கொலை செய்யப்பட்டமை மற்றும் அவரை கடத்திச் சென்றமை சம்பந்தமாக பாதுகாப்பு கமெராக்களில் பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அழிக்கப்பட்ட காணொளி காட்சிகளை மீள பெற்றுக்கொள்வதற்காக காவற்துறையினர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் உதவியை பெற்று வருகின்றனர்.

கொலை நடந்து மூன்று வருடங்களின் பின்னர், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர், கடந்த மார்ச் மாதம் கொலை சம்பவம் குறித்து மீண்டும் விசாரணைகள் தொடங்கப்பட்டன.

அதேவேளை கொழும்பு நகரின் பிரதான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமெராக்களில் பதிவாகும் காட்சிகள் மூன்று வருடங்கள் சேமித்து வைக்கப்படுவதில்லை.

குறுகிய காலத்தில் அவை அழிக்கப்பட்டு விடுவதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

தாஜூடீன் கொலை சம்பவம் தொடர்பான காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பாதுகாப்பு கமெராக்களில் பதிவான கட்சிகளையே பெற்றுக்கொள்ள காவற்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.