மஹிந்த ராஜபக்ஷ, பிரபாகரனுடன் செய்த உடன்படிக்கை தொடர்பில் நாம் தேடவேண்டியவர்களாக இருக்கிறோம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலை புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவேண்டி ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தின்போது பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது தடைவிதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பல நபர்களும் இத் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 8 அமைப்புகள்மீதான தடையும் 267 நபர்கள்மீதான தடையும் அண்மையில் அரசாங்கத்தினால் நீக்கப்பட்டிருந்தன. இந்த விவகாரம் பற்றி தினேஷ் குணவர்தன எம்.பி.யால் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தடைவிதிக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் உடன்படிக்கைககள் செய்துகொள்ளப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இங்கு கேள்வி எழுப்புகிறார். எனினும் 2005 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்தும் நாம் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.
புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைநீக்கம் குறித்து இங்கு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் அதிலும் பார்க்க பாரதூரமான செயற்பாடுகள் இங்கு அரங்கேறியிருக்கின்றன. 2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் இங்கு வருகைதந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் அவர்களால் இங்கு முதலீடுகளை செய்வதற்கு ஏற்ற சூழல் இல்லாததால் அவர்கள் இங்கிருந்து திரும்பிவிட்டனர்.
எனினும் எமது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நாம் இன ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஐக்கிய இலங்கையையும் கட்டியெழுப்பும் நோக்கிலேயே செயற்படுகின்றோம். நல்லாட்சிக்கான அரசாங்கம் அதனைத்தான் செய்து வருகின்றது. புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் இந்நாட்டின் பிரஜைகளே என்பதை மறந்துவிடக் கூடாது.
இதேவேளை 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் புலிகளுடன் நேரடித் தொடர்புடைய 140 பேரை விடுதலை செய்துள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். புலம்பெயர் அமைப்புகளின் தடை தொடர்பில் இங்கு கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அதுபற்றி ஆராயுமாறும் கூறப்படுகிறது. எனினும் 2005 ஆம் ஆண்டு முதல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மேற்கொண்ட உடன்படிக்கைகள் தொடர்பிலும் நாம் தேடவேண்டியவர்களாக இருக்கின்றோம் என்றார்.
Post a Comment