Header Ads



திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம்

திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு, பொலன்னறுவ, திருகோணமலை ஊடான வடக்கிற்கான நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட மூன்று பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த திட்டங்களுக்கு 13.4 பில்லியன் டொலர் (1900 பில்லியன் ரூபா) செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி சீனா, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உள்ளூர் மூலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிடம் இருந்து நிதி திரட்டப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய மாகாணத்துக்கான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் ஆரம்பிக்கப்படும். அதையடுத்து, கஹதுடுவவுக்கும், பெல்மதுல்லவுக்கும் இடையிலான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டமும், வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டமும் ஆரம்பிக்கப்படும்.

வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் தம்புள்ளவில் ஆரம்பிக்கப்பட்டு, பொலன்னறுவ, கந்தளாய், திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக யாழ்ப்பாணம் வரை அமைக்கப்படும். இதற்கு 5.5 பில்லியன் டொலர் செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை வவுனியா, கிளிநொச்சி வழியாக அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

திருகோணமலைத் துறைமுகம் மற்றும், சுற்றுலாத் துறை வளர்ச்சி என்பனவற்றைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், நிகால் சோலங்காராச்சி தெரிவித்துள்ளார்.

அதிகளவு குடியிருப்புகள் இல்லாத இந்தப் பிரதேசங்களில் புதிய அதிவேக நெடுஞ்சாலைக்குத் தேவையான காணிகளைப் பெறுவதும், இலகுவானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது, வவுனியா, கிளிநொச்சி வழியான ஏ-9 வீதி போதியளவு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மில்லியன் பில்லியன் என்று மக்களை ஏன் குழப்புகிறீர்கள். அங்கு குறிப்பிட்டது என்ன ?13.4 பில்லியன் டொலர் அதற்க்கு 1900 பில்லியன் ரூபாய் என்று கணக்கு கூறப்பட்டுள்ளது. 1900 பில்லியன் ரூபாய் என்றால் 1900 கோடிரூபாய். ஆனால் 13.4 பில்லியன் டொலர் என்றால் ஒரு டொலர் 140ருபை என்று வைத்துக்கொண்டாலும் 13.4 பிலியன் டொலருக்கு 1.1/2 ஒன்னரை லட்சம் கோடிரூபாய்கள் என்றுதான் கணக்கு வரும் ..ஒரு பிலியன் என்பது 1000 மில்லியன். இனிமேலும் மில்லியன் பில்லியன் என்று மக்களை குழப்பாமல் கோடி லட்சம் என்று தமிழில் மக்களுக்கு கூறுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.