Header Ads



"முஸ்லிம் அரசியல் கட்சிகள், சமூகத்திற்காக இதுவரை எதனையும் சாதிக்கவில்லை"

நாட்டில் முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பதற்காக முஸ்லிம் அரசியல் மற்றும் சமூகப்பற்றுள்ள தலைவர்களை உள்ளடக்கிய பேரவையொன்று அமைக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

கிழக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களின் உரிமை பற்றியும் வடக்கிலுள்ள முஸ்லிம் அரசயில் தலைமைகள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றியும் ஊடக விளம்பரங்களுக்காகவும் தமது அரசியல் இருப்புக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமே முனைப்புடன் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் தற்போது பங்காளிகளாகவிருக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் சமூகத்திற்காக இதுவரை எதனையும் சாதிக்கவில்லை. அரசியல் தலைமைகள் ஒவ்வொருவரையும் பரஸ்பரம் சாடுவதிலேயே முனைப்புடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் தலைவர் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரபின் காலத்திலிருந்து இடைக்கிடையே கரையோர மாவட்டம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து இப்போது அது கரைந்துவிட்டது.  எனினும் முஸ்லிம்களின் உரிமைகள் வெல்லப்பட வேண்டும் என்ற வெற்றுப் பேச்சு இப்போது எஞ்சியுள்ளது. இதில் ஆரோக்கியமான பலன் எதுவும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோன்று வடபகுதியைச் சார்ந்த முஸ்லிம் தலைமை, சமூகத்தின் மீள்குடியேற்றம் தொடர்பாக பேசுவதும் விளம்பரப்படுத்துவதும் இந்த நாட்டின் பேரினவாதிகள் இறைமைக்கு குந்தகம் ஏற்படுத்துவதாக சமூகத்தை கொச்சைப்படுத்தச் செய்கிறார்கள்.  அந்தவகையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் சுய விளம்பரத்திற்காகவும் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதற்காகவுமே கங்கணத்துடன் அலைந்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசாங்கத்தின் பங்காளிகள் இல்லாத தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கோரிக்கைகள் தொடர்பாக விளம்பரம் செய்யாமல் பேரினவாதிகளின் காதுகளுக்குக் கேளாமல் தமது காரியங்களை கச்சிதமாக சாதித்து வருகின்றனர். குறிப்பாக சம்பூர் அனல் மின் நிலையம் இந்திய அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமாக இருக்கின்ற போதிலும், அது அவ்வாறே இருக்க அரசாங்கத்துடன் பேசி ஆயிரக்கணக்கான ஏக்கர் நில புலங்களை விடுவித்துள்ளமை அக்கட்சியின் சாதனையாகும்.

எனவே முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பதற்காக முஸ்லிம் அரசியல் மற்றும் சமூகப்பற்றுள்ள தலைவர்களை உள்ளடக்கிய பேரவையொன்று அமைக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

No comments

Powered by Blogger.