Header Ads



கலிபா அபூபக்கரின் காலத்தில் எழுதப்பட்ட அல்குர்ஆனே, பிரித்தானியாவில் கண்டுபிடிக்கபட்டதா..?


பிரிட்டிஷ் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய அல் குர்ஆன் பாகம் அல் குர்ஆனின் மூலப் பிரதியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குர்ஆன் பாகம், இறைத்தூதரின் நெருங்கிய தோழரான அபூ பக்கர் காலத்தில் எழுதப்பட்ட குர்ஆனின் பாகமாக இருக்கலாம் என்று முன்னணி நிபுணர்களில் ஒருவரான ஜமால் இபுனு ஹுவரைப் குறிப்பிட்டுள்ளார்.

வேறு குர்ஆன் பாகங்களுடன் இணைக்கப்பட்டிருந்த இந்த குர்ஆன் பாகம் 1,448 முதல் 1,317 ஆண்டுகள் பழைமையானது என்று கார்பன் காலக்கணிப்பு சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆட்சியாளர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குனரான இபுனு ஹுவரைப் பி.பி.சிக்கும் குறிப்பிடும்போது, “இது முஸ்லிம் உலகின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.

இது அபூ பக்கரின் குர்ஆன் என்று நான் நம்புகிறேன். இந்த கண்டுபிடிப்பு, இந்த பாகம், இந்த கையெழுத்துப் பிரதி இஸ்லாத்தின் வேரை, அல் குர்ஆனின் வேரை கொண்டது. இஸ்லாமிய கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதாக உள்ளது” என்று குறிப்பிட்டார். ஆரம்பகால இஸ்லாத்தில் குர்ஆன் மனனமிட்டு ஏழுத்து மூலமாகவன்றி வாய்மூலமாகவே கடத்தப்பட்டதாக நம்பப்படும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு புரட்சிகரமானது என கூறப்படுகிறது.

பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய துறைகளின் பேராசிரியரான டேவிட் தோமஸ் குறிப்பிடும்போது, “இஸ்லாம் ஆறாம் நூற்றாண்டின் கடைசியில் மற்றும் ஏழாம் நுற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த முகமதுவின் வாழ்க்கையுடன் பிணைந்தது.

இந்த கையெழுத்து பிரதியை பார்க்கும்போது இறைத்தூதர் மரணித்த சற்று காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர் பெரும்பாலும், சிலவேளை இறைத்தூதரின் போதனைகளை கேட்டவராக இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் தெரிந்தவராக இருக்கலாம்” என்றார்.

இறைத்துதரின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் முதலாவது கலீபா அபூபக்கர், ஒரு நூலாக அமைக்க குர்ஆன் பாகங்களை சேகரிக்க உத்தரவிட்டார். எனினும் அதிகாரபூர்வமாக எழுதப்பட்ட குர்ஆன் கி.பி. 650 ஆம் ஆண்டு மூன்றாவது தலைவரான கலீபா உஸ்மானின் காலம் வரை பூர்த்தியாகவில்லை.

எவ்வாறாயினும் இந்த குர்ஆன் பாகம் குறித்து பல்வேறு கருத்துகளும் நிலவி வருகிறது. எழுத்தப்பட்டிருக்கும் மிருகத் தோல் அது எழுதப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே இருந்திருக்கலாம் என்றும் ஒரு நிலைப்பாடு உள்ளது. இந்த குர்ஆன் பாகத்தின் உண்மையான வரலாறு உறுதி செய்யப்படாத நிலையிலும் இந்த பாகம் வரலாற்றில் முக்கியமான ஒன்று என பல நிபுணர்களும் கருதுகின்றனர். 

No comments

Powered by Blogger.