"படைவீரர்களையும், கோதபாயவையும் பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமை" பு.சி.அ
படைவீரர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளிடம் புலம்பெயர் சிங்கள அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கண்டி மல்பத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடாதிபதி கலகம ஸ்ரீ அத்தாதஸ்ஸி ஆகிய தேரர்களுக்கு அவசர மகஜர் ஒன்றை புலம்பெயர் அமைப்பு அனுப்பி வைத்துள்ளது.
உலக இலங்கைப் பேரவை என்ற அமைப்பே இவ்வாறு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் வரலாற்றில் என்னுமில்லாதவாறு அரசியல் பழிவாங்கல்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யுத்த வெற்றியின் முகாமையாளராக கடமையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை இலக்கு வைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவரை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளுக்கு சார்பானவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் கோதபாய ராஜபக்ஸ குறி வைக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவன்ட் கார்ட் விவகாரத்தின் அடிப்படையில் கோதபாயவை தண்டிக்க முயற்சிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிறுவனத்தில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என சட்ட மா அதிபரும், பிரபல அமைச்சர்களும் பகிரங்கமாக கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அவன்ட் கார்ட் நிறுவனம் சட்ட ரீதியானது எனவும் ஓய்வு பெற்ற படையினருக்கு வாழ்வாதாரம் வழங்கி வந்த நிறுவனம் எனவும் குறித்த புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் கனடா போன்ற நாடுகளில் கடமையாற்றி வரும் இலங்கை மருத்துவர்கள் பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த புலம்பெயர் அமைப்பில் அங்கம் வகித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment