இஸ்லாத்திற்கு எதிராக போர் செய்ய, அமெரிக்கர்கள் முயலக்கூடாது - ஒபாமா
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சமீபத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததையடுத்து, பெருகிவரும் தீவிரவாதத்தை வேரறுப்பது தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருந்தபடி தொலைக்காட்சி வாயிலாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று (07) உரையாற்றினார்.
உள்நாட்டில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை கருத்தில் கொண்டு பிறமதத்தினரை ஒதுக்கி வைத்து, பாகுபாடு காட்டக் கூடாது என தங்கள் நாட்டினரை கேட்டுக் கொண்ட ஒபாமா தொடர்ந்து பேசியதாவது:-
கலிபோர்னியாவில் நடைபெற்ற கோரச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் (பாகிஸ்தானை சேர்ந்த தம்பதியர்) இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அந்த தாக்குதலுக்கு கடல்கடந்த அல்லது உள்நாட்டு தீவிரவாத இயக்கங்களின் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
ஆனால், அவர்கள் இருவரும் இஸ்லாமைப்பற்றிய தவறான புரிதலால், மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் மீது போர் தொடுக்க மத துவேஷம் என்ற இருண்ட பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர். துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள், பைப் குண்டுகள் ஆகியவற்றை ஏராளமாக சேமித்து அப்பாவி மக்களை கொல்லும் நோக்கத்தில் இந்த தீவிரவாத தாக்குதலை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
தீவிரவாதிகளின் இதுபோன்ற செயல்பாடுகளை அமெரிக்காவுக்கும் இஸ்லாம் மதத்துக்குமான போராக மாற்ற அமெரிக்க மக்கள் முயற்சிக்க கூடாது. இதைத்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவதிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு நாம் பலியாகி விடக்கூடாது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமுக்காக பேசவில்லை. அவர்கள் கொடூரமானவர்கள், கொலைக்காரர்கள், மரணத்தின் அடையாளமாக இருப்பவர்கள்.
இவர்களின் சித்தாந்தத்தை வெறுக்கும் நாட்டுப்பற்று மிக்க அமெரிக்க முஸ்லிகள் உள்பட உலகம் முழுவதிலும் உள்ள நூறு கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களில் இந்த தீவிரவாதிகள் ஒரு மிகச்சிறிய பகுதிதான். எல்லாவற்றிற்கும் மேலாக, உலகம் முழுவதும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தீவிரவாதத்தை வேரறுப்பதில் நாம் வெற்றிகாண வேண்டுமானால், சந்தேகப்பட்டும், வெறுத்தும் ஒதுக்கித்தள்ளி விடாமல் முஸ்லிம் சமுதாயங்களை நமது வலிமையான கூட்டாளிகளாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
மதசகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதை, மனிதமாண்பு ஆகியவற்றின் அடிப்படையிலான இஸ்லாமின் கோட்பாடுகளுக்கு எதிராக அமைந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா போன்ற தீவிரவாதக்குழுக்களின் சித்தாந்தங்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுப்பதுடன் அதை ஒழிக்க அமெரிக்காவில் உள்ள முஸ்லிம் தலைவர்களும், உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம் தலைவர்களும் கூட்டாக சேர்ந்து எங்களோடு இணைந்து போராட முன்வர வேண்டும்.
நமது நாட்டில் யாரை அனுமதிப்பது? என்ற மதம்சார்ந்த பரிசோதனைகளை புறக்கணிக்க வேண்டியதும், அமெரிக்க முஸ்லிம்களை வேறுமாதிரியாக நடத்த வேண்டும் என்ற நோக்கத்தை நிராகரிக்க வேண்டியதும் நமது பொறுப்பாகும். ஏனெனில், இதைப்போன்ற பிரிவினைவாத எண்ணங்கள்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாதக்குழுக்களுக்கு சாதகமான அம்சமாக மாறி விடுகின்றது.
இவ்வாறு அவர் பேசினார்.
Excellent statement
ReplyDelete