Header Ads



கொலைகார அரசியலை பாராளுமன்றத்துக்கும் கொண்டுவர, ராஜபக்‌ஷ சக்திகள் முயல்கின்றன - மங்கள

றகர் விளையாட்டு வீரர் தாஜூதீனின் கொலை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்முஜிபுர் ரஹ்மானின் உரைக்கு இடையூறுசெய்த ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவரைத் தாக்க முயற்சி செய்தனர். இதனால் பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதோடு உறுப்பினர்களைக் கட்டுப்படுத்த முடியாததால் சபை இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சபாநாயகரிடம் கோரியதோடு இதனுடன் தொடர்புள்ள வீடியோ அடிப்படையில் விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் அறிவித்தார்.

இருந்தும் ஆசனங்களில் எழுந்து நின்று கோசம் எழுப்பிய ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான் எம்.பியின் உரையை வாபஸ் பெற வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மீண்டும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி உரையாற்ற ஆரம்பித்ததோடு, தம்மை தாக்குவதற்காக ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, சனத் நிசாந்த, இந்திக்க அனுருத்த ஆகியோர் முயன்றதாகவும் தன்னை வெளியில் வைத்து தாக்குவதாக அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றி நாமல் ராஜபக்‌ஷ எம்பி இறுதிக்கட்ட யுத்தத்தில் திட்டமிட்ட மனித உரிமை மீறல்களில் படையினர் ஈடுபட்டதாக தெரிவிக்கும் அல்ஹூசைனின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் ஏற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய முஹிபுர் ரஹ்மான் கொலை செய்தவர்கள் திட்டமிட்ட கொலை குறித்துப் பேசுவதாகக் குறிப்பிட்டார். 

முஹிபுர் ரஹ்மான் எம்பி தொடர்ந்தும் தாஜூதீன் கொலை குறித்து பேசியதையடுத்து ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, இந்திக்க அனுருத்த, அடங்கலான 10ற்கும் மேற்பட்ட ஐ.ம.சு.மு எம்பிக்கள் ஆளும் தரப்பின் பின் வரிசையில் நின்று பேசிக்கொண்டிருந்த முஜிபுர் ரஹ்மானின் ஆசனத்துக்கு அருகில் வந்து அவரை தாக்க முயன்றனர்.

அவர் மீது புத்தகங்களும் தூக்கி ஏறியப்பட்டன. இந்தக் குழப்பத்தையடுத்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

10 நிமிடங்களின் பின்னர் சபை நடவடிக்ைக ஆரம்பமானது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தான் 1989 முதல் பராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றபோதும் இவ்வாறு எம்பி ஒருவர் பேசுவதை சபையில் தாக்கிய சம்பவம் நடந்ததில்லை என்றார். கொலைகார அரசியலை பாராளுமன்றத்துக்கும் கொண்டுவர ராஜபக்‌ஷ சக்திகள் முயல்கின்றன. இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றார்.

இந்தக் குழப்பம் காரணமாக சபை நடவடிக்கைகள் சுமார் 2 மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன.

No comments

Powered by Blogger.