"கட்டாரிலிருந்து வந்த மகனை தேடித்தாருங்கள்"
-Tm-
கடந்த 13ஆம் திகதி, கட்டாரிலிருந்து நாடு திரும்பிய இளைஞன், இது வரை வீடு திரும்பவில்லை என்று, காணாமல் போன இளைஞனின் பெற்றோர், வவுணத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு - புது மண்டபத்தடி, கன்னன்குடாவைச் சேர்ந்த நவரெட்ணம் குணராஜன் (வயது 22) என்பவர், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் கட்டார் நாட்டுக்குச் சென்றுள்ளார்.
எனினும், அங்கு சென்ற பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, அவர் கடந்த 13.12.2015 அன்று நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
அன்றைய தினம் நள்ளிரவு 12.40 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
எனினும், அவரை அழைத்து வரச்சென்ற தந்தை, வெகுநேரமாகக் காத்திருந்தும் தனது மகன் வராததால், அங்குள்ள விமான நிலையப் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். கட்டாரிலிருந்து நாட்டுக்கு வந்தவர், விமானநிலையத்தை விட்டு வெளியேறிச் சென்று விட்டதாக, அங்கிருந்த கமெராக்களில் பதிவாகியிருந்த காணொளிகளை ஆதாரத்தை வைத்து, விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காணாமல் போன இளைஞனுடன், விமானத்துக்கு வந்திறங்கிய, மொரட்டுவையைச் சேர்ந்த குணராஜனின் நண்பன், விமானநிலையத்துக்கு வந்து சோதனைகள் முடியும் வரை, குணராஜன் தன்னுடனேயே இருந்ததாகவும் அதன் பின்னர் காணாமல் போய் விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னரே, வவுணத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டள்ளது.
காணாமல் போயுள்ள இளைஞன் தொடர்பாக எவருக்கேனும் தகவல் தெரிந்தால், 0779424185, 0772768735 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர் கோரியுள்ளனர்.
மேலும், கடந்த ஒக்ரோபர் இறுதி வாரத்தில் கட்டாருக்கு சுத்திகரிப்பாளர் தொழிலுக்காக சென்ற தன்னுடைய மகன், புத்தி சுவாதீனமாகியுள்ளதாகவும் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவருடைய நண்பர் மூலம் அறிந்துகொண்டுள்ளதாக, காணாமல் போயுள்ள இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.
Post a Comment