சஜித் - கரு நீக்கம், நான் எதிர்கொண்ட நெருக்கடியை எதிர்கால தலைவர் அனுபவிக்ககூடாது - ரணில் உருக்கம்
தலைமைப்பதவிகளிற்கான போட்டிகள் காரணமாக கடந்த வருடங்களில் பலபாதிப்புகளை எதிர்கொண்ட ஐக்கிய தேசிய கட்சி எதிர்காலத்தில் அவ்வாறான நிலை மீண்டும் தோன்றுவதை தடுப்பதற்காக பிரதிதலைவர் பதவியை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கட்சியின் ஸ்தாபக தலைவர்களால் உருவாக்கப்பட்ட யாப்பினை மீண்டும் உறுதியாக பின்பற்றவேண்டும் என்ற யோசனை கட்சியின் அடுத்த செயற்குழு கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள கட்சி வட்டாரங்கள் கட்சியின் யாப்பில் பிரதி தலைவர் பதவியென்ற ஓன்று குறித்து குறிப்பிடப்படாததையும் சுட்டிக்காட்டியுள்ளன.
கடந்த காலங்களில் அரசியல் நெருக்கடி காரணமாகவே பிரதிதலைவர் பதவியையும், கட்சியின் தலைமைத்துவ பேரவை என்ற குழுவையும் உருவாக்கநேர்ந்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தான் எதிர்கொண்ட நெருக்கடிகள் போன்றவொன்றை ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால தலைவர்கள் எவரும் அனுபவிப்பதை தான் விரும்பவில்லை என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க சமீபத்தில் கட்சியின் மூத்த தலைவர்களிற்கு தெரிவித்துள்ளார்.
தான் அவ்வாறான அழுத்தங்களிற்கு அடிபணிந்திருந்தால் என்ன நடைபெற்றிருக்கும் என கேள்வி எழுப்பியுள்ள பிரதமர் அவ்வேளை காணப்பட்ட அரசியல் சூழலை சரியாக புரிந்துகொள்ளும் திறனற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் சிலர், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படவேண்டும் என கருதியாதாகவும் கட்சியின் ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பை பலப்படுத்தும் எந்த நடவடிக்கையும் கட்சியின் ஐக்கியத்தை பலப்படுத்துவதை நோக்கமாககொண்டிருக்கும், தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல் எதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தற்போதைய பிரதி தலைவராக சஜித்பிரேமதாசா பதவிவகிக்கின்ற அதேவேளை தலைமைத்துவ பேரவையின் தலைவராக சபாநாயகர் கருஜெயசூர்ய விளங்குகின்றார்.
Post a Comment