"விவாதங்களுக்குப் பின்"
- ஏ. எல். ஆஸாத் –
இலங்கை சட்டக்கல்லூரி
எமது நாட்டின் அரசியல் அரங்கில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஸ்தாபகருமாக மர்ஹும் எம். எச். எம். ௮ஸ்ரப் - சோமஹிமி தேரர் ஆகியோருக்கிடையேயான தீகவாபி தொடர்பிலான விவாதம் நாடறிந்த பிரபல்யத்தை ௮ஸ்ரப் அவர்களுக்குப் பெற்றுத் தந்ததோடு முஸ்லிம்கள் மத்தியிலும் நற்பெயரைச் சம்பாதிக்க துணை நின்றது. ஆனாலும், இவ்விவாதமும் பெரும்பான்மை மக்களுடனான ஒரு இணக்கத்தைச் சம்பாதிக்க செய்யப்பட்டதே தவிர அரசியல் இலாபங்கள் இதற்குள் புகுந்திருக்க வாய்ப்பேதுமில்லை. ஏனெனில், அத்தகைய காலகட்டத்தில் தமிழர்களுடன் பெரும்பான்மையினர் கொண்டிருந்த முரண்பாடு இதற்கு வகை சொல்லும்.
இருப்பினும், இந்த விவாதம் இது போன்ற பின்னைய விவாதங்களுக்கு இடம் வைத்துச் சென்றுள்ளதை இன்று நாம் உணரக் கடமைப்பட்டுள்ளோம். தமிழர்களுடனான யுத்த வெற்றிக்குப் பிறகு முஸ்லிம்களையும் அடக்குவதை நோக்காகக் கொண்டு சில இனவாத கும்பல் இந்நாட்டில் செயற்படுவதை பொதுபல சேனா போன்ற அமைப்பினரின் செயற்பாடுகளின் மூலம் நாம் கண்டு கொள்ளக்கூடியதாய் இருக்கிறது. இத்தருணம் விவாதங்களுக்கு நேரம் செலவளிக்கும் தருணமா அல்லது இவ்விவாதாங்களின் பின்னால் உள்ள அரசியல் இராஜதந்திரங்களை எதிர் கொள்ளும் தருணமா என்பதை விவாதத் தரப்பு சற்று சிந்திக்கத் தலைப்படவேண்டும்.
1. வில்பத்துக் காட்டுக்குள் மீள் குடியேற்றம் செய்யப்படுகிறது
2. வட மாகாண முஸ்லிம்கள் போதைப் பொருள் கடத்துவதில் ஈடுபட்டுள்ளனர்
3.அமைச்சர் றிஸாட் பதியுதீனின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கின்றன
போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே ஒரு விவாத அரங்கு டிசம்பர் 28 ஆம் திகதி ஹிரு தொலைக்காட்சியில் அமைச்சர் றிஸாட் - ஆனந்த தேரர் ஆகியோருக்கிடையே இடம்பெற இருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தை முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறு எண்ணுவது? இது தொடர்பில் எமது எதிர் வினைகள் எப்படி அமையப் போகின்றது என்பதை புலப்படுத்துவதே இத்தகைய விவாதங்களுக்குப் பின்னாலான அரசியல் பற்றிய ஆக்கத்தின் நோக்கமாகும். ஒரு தரப்பினர் இதனை றிஸாட் அவர்களின் அரசியல் இலாபத்துக்காக செய்யப்படும் நாடகம் என பரிகசிக்கின்றனர். இதை நிறுவுவதல்ல எம் நோக்கம். எது எவ்வாறாயிருப்பினும் இவ்வாறானதொரு சூழலில் இவ்விவாதம் ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதையே நாம் சிந்தையில் இருத்த வேண்டும். அரசு தெளிவான முறையில் றிஸாட் குற்றமற்றவர் மேலும் அவரது செயற்பாடுகள் நீதியானதே என்று அறிவித்தும் இத்தகைய அறகூவல்கள் எதற்காகச் செய்யப்படுகின்றன என்பது பாரியதொரு கேள்விக்குறியை எம்முன் தூக்கி நிறுத்துகின்றது.
சமூகம் சார்ந்த கதையாடல்கள் ஒட்டு மொத்த சமூகத்தையும் பணயம் வைக்கும் விவாதங்களையும் தோற்றுவிக்கும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் எதற்காக மீண்டும் மீண்டும் எமக்கு மத்தியில் ஏற்படுத்தப்படுகின்றன என்பதை சிந்திக்கையில் பேரினவாத வலையொன்று எம்மைச் சூழ பின்னப்படுகின்றதா என்கின்ற வலுவானதொரு சந்தேகத்தை எமக்குள் துளிர் விடச்செய்கிறது. அதேபோன்று இலங்கை முஸ்லிம்களின் அதிகாரபூர்வ காவலன் யாரென்ற பனிப்போரொன்றும் எம்முள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நாம் இவையெல்லாம் எதற்காக நடக்கிறது என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
பெரும்பான்மை ஆதிக்க சக்தியினரின் சதியாயின் விவாதத்துக்கு போக வேண்டிய எவ்வித அவசியமும் எமது நாட்டில் கிடையாது. தெளிவான அரசியலமைப்பையும் சட்டவாட்சியையும் கொண்டதொரு நாட்டில் விவாதத்தால் எதனையும் சாய்க்கவோ சாதித்திடவோ முடியாது என்பது அனைவரும் அறிந்தது. பெரு அதிகாரம் கொண்ட அமைச்சருக்கு இது புலப்படமலா போகும். அவர் மீது புத்த பிக்குகளில் சிலர் வைத்த குற்றச்சாட்டுகளுக்காக ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் கத்தியில் நிற்க வைக்க வேண்டியதில்லை. பொதுவாகவே, குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இலங்கையில் நீதி அமைப்பிருக்கிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியையே அழைத்து விசாரிக்க தகுதியுடைய நீதி அமைப்பிருந்தும் இந்த ஹிரு தொலைக்காட்சியால் எப்படிப்பட்ட நீதியை கண்ணியமிக்க அமைச்சர் எதிர்பார்க்கின்றார் என்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
பெரும்பான்மை மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்தவே இவ்வாறானதொரு ஏற்பாடு என்று வைத்துக் கொண்டாலும் அரசு தெளிவாகவே குற்றமற்றவர் என்று சொல்லி விட்ட பிறகும் எதற்காக தேவையற்ற விவாதம். இது வெறுமனே அரசியல் இலாபம் பெறும் விடயமல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கை சீவியம் எப்போதும் போதைப் பொருள் கடத்துவதில் இருந்ததில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். உங்கள் ஆதரவாளர்கள் போதைப் பொருள் கடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால் அதற்கு வழக்கிடுவதுதானே தர்மம். நீதி மன்றம் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆதாரங்களை ஆய்ந்து தீர்ப்பளிக்கும்.
உங்கள் குற்றங் குறைகளை தோண்டித் துருவுவதல்ல எமது நோக்கம். சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கு நீங்கள் விடையளிக்க நினைக்கும் வழிமுறைதான் தவறு. வாதம் புரிவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. சென்ற முறை நீங்கள் விவாதத்துக்குச் சென்ற போது சான்றுகளை முன் வைத்து வாதிட்டமை பாராட்டத் தக்கதே! இருப்பினும், தங்களது சிங்கள மொழியின் புலமை குறித்து இன்னும் சந்தேகங்கள் இருப்பதால் சொல்ல வந்த விடயத்தை உரிய முறையில் புரிய வைக்க முடியாவிடின் தோல்வி யாருக்கு ஏற்படும்? நீங்கள் தோற்று விட்டால் குற்றவாளி என ஒப்புக் கொள்வீரா?
எதுவும் நடக்கப் போவதில்லை என்று தெரிந்தும் இவ்விவாதத்தில் நீங்கள் கலந்து கொள்வது அரசியலில் ஆதரவு அலைகளை உருவாக்கும் சாத்தியத்திற்காகவா? உங்கள் அரசியல் வெற்றிக்காக தங்களது சமூகத்தையே பொறி வைப்பதா? இத்தனையையும் சிந்தித்திருந்தால் தங்களது முடிவு வேறாகவே இருந்திருக்கும். தமிழச் சமூகம் தங்களின் ஏக பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கருதுகிறது. தங்களுக்கென ஒரு குறிக்கோளை நிர்ணயித்துக் கொண்டு தெளிவாக அதை நோக்கி நடைபயில்கின்றனர். பதவிகளுக்காக தங்கள் சமூகத்தை விற்றுப் பிழைக்கும் அரசியல் இலக்கணம் தெரியாதவர்கள்.
இப்படி விவாதங்களுக்கெல்லாம் செல்லாதவர்கள். பேச வேண்டியவர்களுடன் பேசினார்கள். இறுதியில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஆயிரம் ஏக்கர்களுக்கு மேலான காணியை மீட்டுள்ளனர். அத்தோடு மட்டும் நின்றுவிடாது, தனி ஈழப் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பல நூறு கைதிகளை மீட்டுள்ளனர். ஆனால், எமது தலைவர் ஒருவருக்கோ முஸ்லிம்களின் பிரச்சினை என்னவென்றே தெரியாது. எது தொடர்பிலும் அவர் அக்கறை காட்டியதும் கிடையாது. அரசியல் பங்கிலாபங்களை சுகித்துக் கொண்டு கண் மூடிக்கிடக்கும் அவரை தேர்தல் காலங்களில் மட்டும் மேடைகளில் காணலாம். மாகாணத்துக்கான அதிகாரம், முஸ்லிம் தனியலகு, கல்முனை மாவட்டம் போன்ற கூச்சல்களால் எம்மை மயிர் கூச்சசெரியும் ரசவாதம் தெரிந்தவர். அடுத்தவரோ, தேவையில்லாத பிணக்குகளில் தலைவிட்டு மூக்குடைபடும் அவலத்தை காணும் போது தலைவருக்கான போட்டியில் சமூகத்தை தாரைவார்க்கின்றதையே எமக்கு உணர்த்தி நிற்கின்றது.
முடிவாக, காலம் எப்போதும் சாதித்தவர்களையும் சாதனைகளையும் மட்டுமே நினைவில் வைத்திருக்கும். காலம் எப்போதும் தங்களை நினைவில் வைத்திருக்க இவ்விவாதம் ஒரு பொருட்டேயல்ல. சமூகத்துக்கு நன்மை செய்யவே உண்மையில் நீங்கள் நாடியிருப்பின் தீயவைகளையும் சமூகத்துக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும் நடமுறைகளையும் தவிர்ந்தே ஆக வேண்டும். மஹிந்தவின் ஆட்சியில் இவ்வாறானதொரு கேள்விக்கணை உமக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. வந்திருந்தாலும் விவாதத்துக்குச் செல்லும் தைரியம் வந்திருக்குமா? என்னும் கேள்வி இன்னும் என்னைக் குடைந்து கொண்டேயிருக்கிறது.
Post a Comment