கிராமங்களை நோக்கி, படையெடுக்கும் நாகப் பாம்புகள்..!
நிலவி வரும் கடுமையான மழையுடன் கூடிய காலநிலை காரணமாக உடவளவ, பல்லேபெத்த கிராமங்களுக்குள் நாகபாம்புகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உடவளவ, பல்லேபெத்த, கல் பிபிலாகம்யாய, பலவின்ன போன்ற கிராமங்களில் உள்ள வீடுகளை நோக்கி அதிகளவான நாகபாம்புகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.
இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளதுடன் அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
வீடுகளின் அறைகள், மரத் தளபாடங்கள், வாகன கராஜ்கள், விறகு மடுவங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் பாம்புகள் குடிகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமையை அவதானித்த பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம். சமிந்த என்ற இளைஞர் தன்னார்வ அடிப்படையில் சுமார் நாற்பது நாகப் பாம்புகளை பிடித்து அவற்றை உடவலவ வனவிலங்கு சரணாலயத்திற்குள் விட்டுள்ளார்.
அதிகளவான பாம்புகள் கிராமங்களுக்குள் புகுந்துள்ள போதிலும் இதுவரையில் பாம்புத் தீண்டல் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
எனினும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடுமென மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
நிலவி வரும் கடுமையான மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பாம்பு புற்றுகளுக்குள் நீர் நிறைந்துள்ளதனால் இவ்வாறு பாம்புகள் வீடுகள் நோக்கிப் படையெடுப்பதாக வனவிலங்கு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
இதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவும் குறித்த கிராமங்கள் நோக்கி அதிகளவு பாம்புகள் படையெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment