Header Ads



"என்னைப் போன்ற துணிச்சலான அதிபர்களே, அமெரிக்காவுக்குத் தேவை"

தன்னைப் போன்ற துணிச்சலான அதிபர்களே அமெரிக்காவுக்குத் தேவைப்படுவதாக அந்த நாட்டு அதிபர் பதவி வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் கூறினார்.

 அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கான தேர்வில் போட்டியிடுபவர்கள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சி, "என்.பி.சி. நியூஸ்' தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது.

 அதில் பேசிய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடுபவருமான ஹிலாரி கிளிண்டன், டொனால்டு டிரம்ப்பின் முஸ்லிம் விரோதப் பேச்சுக்கள் அடங்கிய விடியோக்களைப் பயன்படுத்தி, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தங்கள் அமைப்பில் ஆட்களை சேர்த்து வருவதாக குற்றம் சாட்டினார்.

 இதுகுறித்து குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:

 எனது கருத்துகளைத் துணிச்சலுடனும், உறுதியுடனும் நான் வெளிப்படுத்துகிறேன்.

 அமெரிக்காவுக்கு பலம் வாய்ந்த, துணிச்சலான, சாமர்த்தியம் மிக்க அதிபர்தான் தேவை.

 ஹிலாரி கிளிண்டனைப் போல பலவீனமானவர்கள் தேவையில்லை. தற்போதைய அதிபரைப் போல மேலும் ஒரு மோசமான அதிபரை இந்த நாடு தாங்காது.

 எனது பேச்சுக்கள் அடங்கிய விடியோவைப் பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆள் சேர்ப்பில் ஈடுபடுவதாக ஹிலாரி கூறுவது, பொய்யான குற்றச்சாட்டு ஆகும். நடக்காத ஒன்றை நேரில் பார்த்தது போல் அவர் கூறுவது ஏற்கக் கூடியது அல்ல என்றார் அவர்.

No comments

Powered by Blogger.