Header Ads



பலஸ்தீனர்கள் கல்லெறிவது போன்ற, பொம்மைகளுக்கு இஸ்ரேல் தடைவிதித்தது

 பலஸ்தீனர்கள் கல்லெறிவது போன்ற பொம்மைகளை இஸ்ரேலிய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பலஸ்தீன கடைகளில் விற்பதற்காக இந்த பொம்மைகள் கப்பல் ஒன்றில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இஸ்ரேலிய ஹைபா துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பலில் இருந்தே 4,000 பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இவை இஸ்ரேலுக்கு எதிரான வன்முறையை தூண்டுவதாக உள்ளதென இஸ்ரேல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

சம்பிரதாயமாக பலஸ்தீனர்கள் தலையில் அணியும் துணியால் முகம் மூடப்பட்டிருக்கு இந்த பொம்மையின் கையில் ஏறிவதற்கு தயாரான வகையில் போலியான கல் வைக்கப்பட்டுள்ளது. “பலஸ்தீன கொடியின் நிறத்திலான இந்த பொம்மைகளில் ‘ஜெரூசலம் எம்முடையது’ மற்றும் ‘ஜெரூசலமே நாம் வருகிறோம்’ என்ற சுலோகங்கள் எழுதப்பட்டுள்ளன” என்று இஸ்ரேல் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் நீடித்துவரும் பதற்றத்தில் இதுவரை இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 112 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அங்கு நாளாந்தம் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குறித்து பலஸ்தீன இளைஞர்களிடம் கடும் ஆத்திரம் இருப்பதோடு போதிய அமைதி முயற்சிகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் பலஸ்தீன தலைமைகள் மீது அதிருப்தி உள்ளது.


No comments

Powered by Blogger.