பாபர் மசூதி இடிப்பு, தினம் பாதுகாப்பு பணியில் போலீசார்
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். எனவே டிசம்பர் மாதம் 6-ந் தேதியான இன்றைய தினத்தையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவின்பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சுற்றுலாத்தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டு பயணிகள் சோதனையிடப்படுகின்றனர். மேலும் மோப்பநாய் மூலம் பயணிகளின் உடைமைகள் சோதனையிடப்படுகின்றன. ரெயில்களில் பாதுகாப்புக்காக போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் லாட்ஜ்களில் சோதனை, வாகன சோதனை போன்றவையும் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் கூறுகையில், “டிசம்பர் 6-ந் தேதியையொட்டி குமரி மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் நடந்த வாகன சோதனையில் 4,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.
Post a Comment