கல்முனை நகரினை துரிதமாக அபிவிருத்தி செய்ய, ஹக்கீமிடம் பிரதமர் ரணில் உறுதி
கல்முனை நகரினை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான வாக்குறுதியினை அமைச்சரும், மு.கா. தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதி செய்துள்ளார் என்று, அமைச்சர் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் மு.காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில், துரித நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று செவ்வாய்கிழமை கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் சகல அமைச்சின் மேலதிகச் செயலாளர்களும் பங்குபற்றினர்.
இதன்போதே, கல்முனை நகரை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான வாக்குறுதியினை மு.கா. தலைவர் ஹக்கீமிடம் பிரதமர் ரணில் உறுதி செய்ததாகவும், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
'பொதுத் தேர்தல் காலத்தில், கல்முனையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் கலந்து கொண்டு, கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பில் வழங்கியிருந்த வாக்குறுதிகளை, இச் சந்திப்பின்போது பிரதமரிடம் மு.கா. தலைவர் ஹக்கீம் நினைவுபடுத்தினார்.
மேலும், கல்முனை துரித நகர அபிவிருத்தித் திட்டம் குறித்த பல்வேறு தேவைகளையும், குறைபாடுகளையும் அமைச்சர் ஹக்கீம் இதன்போது பிரதமரிடம் சுட்டிக் காட்டினார்.
இதனையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்முனை நகரின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அதேவேளை, அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டிய விடயங்கள் தொடர்பான ஆவணங்களை, அம்பாரை மாவட்ட நகர அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளரிடமிருந்து பெறுவதோடு, கல்முனை நகர அபிவிருத்தியை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை தயாரிக்குமாறும் பிரதமர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை, கல்முனை நகர அபிவித்தி தொடர்பான செயல் திட்டத்தை எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர், தனக்கு கையளிக்குமாறும் பிரதமர் வலியுறுத்தினார்.
கல்முனை துரித நகர அபிவிருத்தித் திட்டமானது, ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் இடம்பெறவுள்ளது.
இதற்கிணங்க, ஜப்பான் நாட்டின் பிரதமர் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்' என்றார்.
Post a Comment