Header Ads



ATM இயந்திரத்தை கழற்றிய திருடன், 40 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் - யாழ்ப்பாணத்தில் சம்பவம்

திருநெல்வேலியில் இயங்கி வரும் கொமர்ஷியல் வங்கி கிளையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பணப்பரிமாற்று ஏ.ரி.எம் இயந்திரத்தை சாதுரியமாகக் கழற்றிய திருடன், அதற்குள் இருந்து சுமார் 40 ஆயிரம் ரூபா பணத்தை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளான். இச்சம்வம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஏ.ரி.எம். இயந்திரத்தை கழற்றி பணத்தை எடுத்து விட்டு மீண்டும் இருந்தது போன்று பூட்ட முற்பட்ட போதே அபாய எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இந்நிலையில் பண மோசடி இடம்பெறுவதனை வங்கியின் தலைமையகத்தின் தொழில்நுட்பப் பிரிவினரால் அவதானிக்கப்பட்டு குறித்த கிளையின் முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து முகாமையாளர் ஏ.ரி.எம். இயந்திரத்துக்கு சென்ற போது திருடன் அவரைத் தள்ளிவிட்டுத் தப்பித்துள்ளான். இதையடுத்து வங்கி பாதுகாப்பு ஊழியர்களிடம் முகாமையாளர் சம்பவத்தை தெரிவிக்க அவர்கள் திருடனைத் துரத்திச் சென்றனர். அத்துடன் அந்தப் பகுதி இளைஞர்களும் திருடனைப் பிடிக்க முயற்சி செய்த போதும் அவன் தனது மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பை என்பவற்றை கைவிட்டு தப்பித்துள்ளான்.

தப்பியோடும் போது பையொன்றையும் மோட்டார சைக்கிள் திறப்பபையும் தவறவிட்டுவிட்டு சென்றுள்ளான் இவற்றைப் பொலிஸார் மீட்டு சோதனையிட்ட நிலையில் அந்த திறப்புக்குரிய மோட்டார் சைக்கிளும் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

திருடனால் கைவிட்டுச் சென்ற கைப்பையினுள் போலியான தன்னியக்க பணப்பரிமாற்று அட்டைகள் பல காணப்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக வங்கி அருகில் உள்ள கடையொன்றின் தன்னியக்க கண்காணிப்புக் சீ.சீ.ரி கமராவில் பதிவான காட்சிகளையும் பெற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதில் பதிவான காட்சிகளின் படி இந்த திருட்டுக்கு மேலும் ஒருவர் உடந்தையாக இருந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.