சுவிஸில் உருவாக்கப்பட்ட 9 மில்லியன் டாலர் கைடிகாரம், ஆனால் கட்டமுடியாது
இதுவரை தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரங்களிலேய மிகவும் நுட்பமான பாகங்களைக் கொண்டு சுவிஸில் உருவாக்கப்பட்ட வாட்ச் ஒன்று கடந்த செப்டெம்பரில் விற்பனைக்காக வெளியிடப்பட்டிருந்தது.
மொத்தம் 2826 பாகங்களுடனும் 57 விசேட தொழில்நுட்ப நுணுக்கங்களுடனும் உருவாக்கப்பட்ட அந்தக் கைக்கடிகாரத்தின் மணியோசை, உலக அளவில் புகழ்பெற்ற லண்டனின் பிக் பென் கோபுரத்தின் கடிகார மணியோசையை நினைவூட்டுகிறது.
அதிசயிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட 9 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இந்த வாட்ச்சுக்கு சொந்தக்காரர் அமெரிக்காவின் நியு யார்கைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியுமே தவிர, அவரது பெயர் விபரங்கள் வெளியாகவில்லை.
இதில் சுவாரஷ்யமான செய்தி என்னவென்றால், சுமார் 900 கிராம் எடையுள்ள இந்தக் கைக்கடிகாரத்தை உண்மையிலேயே யாராலும் இயல்பாக அணிந்து கொண்டு வெளியில் செல்ல முடியாது.
ஆனாலும், இவ்வாறான தயாரிப்புக்கள் எதிர்காலத்திற்கான கண்டுபிடிப்புக்களுக்கு உதவியாக இருக்கும்.
சிக்கலான வடிவமைப்பைக் கொண்ட இவ்வாறானதொரு இயந்திரக் கடிகாரத்தை உருவாக்குவது முட்டாள்தனமானது என்று சிலர் தெரிவிப்பதாக கைக்கடிகாரத் தயாரிப்பிற்கு புகழ்பெற்ற மேற்கு சுவிட்சர்லாந்தின் ஜூ பள்ளத்தாக்கில் உள்ள எஸ்பேஸ் ஹோலோகர் வாட்ச் அருங்காட்சியத்தின் இயக்குனர் வின்சன்ட் ஜட்டோன் தெரிவித்தார்.
பாரம்பரிய முறைகளில் பண்டைய இயந்திரங்களை கொண்டு சிக்கலான கைக்கடிகாரங்களை கைகளால் தயாரித்து வரும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற கடிகார நிபுணர்கள் பலர் ஜூ பள்ளத்தாக்கில் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் தயாரிக்கும் நேர்த்தி மிக்க தனித்தன்மை வாய்ந்த கடிகாரங்கள், சர்வதேச சந்தையில் மிகப்பெரிய நிறுவனங்களுடன் போட்டிபோடும் அளவிற்கு புகழ்பெற்றவையாகவும் மதிப்பு மிக்கவையாகவும் விளங்குகின்றன.
Post a Comment