சம்மாந்துறை 6ஆம் கொலனி, அல்-மஸ்ஜிதுல் ரௌழா மையவாடிக்கு சேதம் விளைவிப்பு (படங்கள்)
சொறிக்கல்முனை சம்மாந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள 6ஆம் கொளனி, அல்-மஸ்ஜிதுல் ரௌழா மையவாடி பள்ளிவாசல் சுற்று வேலி நேற்று சனிக்கிழமை (26) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜூம்மா பள்ளிவால் தலைவர் எம்.எச்.அபூபக்கர் தெரிவித்தார்.
இப்பள்ளிவாசல் 1973ஆம் ஆரம்பிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு நிருவகிக்கப்பட்டு வந்த பழைமைவாய்ந்த நிலையில் காணப்பட்டதால் உடைக்கப்பட்டு சவூதி அரேபிய டுபாய் நாட்டின் ரகுமா அமைப்பின் 2 மில்லியன் ரூபாய் செலவில் முஸ்லிம் கலாச்சார மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிப்பதற்கென அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் இடம்பெற்ற நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அம்பாரை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப்ஹக்கீம் சம்பவத்தை கேள்வியுற்றதும் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து சேதமாக்கப்பட்டவற்றை பார்வையிட்டார்.
அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறியதுடன் இவ்வாறான சம்பவங்களால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படக்கூடாது இப்பிரதேசத்தில் வாழும் இரு சமூகத்தவர்களும் புரிந்துணர்வுடனும், விட்டுக்கொடுப்புடனும் வாழ்வதற்கு எதுவித அசம்பாவிதமுமின்றி வேலையை முன்னெடுக்குமாறும் பள்ளிவாசல் நிருவாகத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.
Post a Comment