Header Ads



5 மில்லியன் டொலர்களை, லஞ்சமாக கேட்ட மஹிந்த அரசாங்கம் - ரணில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் லஞ்சம் கோரியதனால் உலகின் முதனிலை கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஜெர்மனின் வொக்ஸ்வோகன் நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்யவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்., மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் வொக்ஸ்வோகன் நிறுவனத்திடம் ஐந்து மில்லியன் டொலர்களை லஞ்சமாக கோரியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

வட மத்திய மாகாணத்தில் வாகன பொருத்தும் உற்பத்திசாலையொன்றை ஆரம்பிக்க வொக்ஸ்வோகன் நிறுவனம் விரும்பியதாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கம் லஞ்சம் கோரியிருக்காவிட்டால் பல காலங்களுக்கு முன்னதாகவே இந்த உற்பத்திசாலை நிறுவப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மன் தூதுவர் மற்றும் வொக்ஸ்வோகன் அதிகாரிகளிடம் தாம் பேசியதாகவும், கார் உற்பத்திசாலையை இலங்கையில் ஆரம்பிக்கும் திட்டத்தில் மாற்றமில்லை என அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வொக்ஸ்வோகன் நிறுவனத்தின் உள்நாட்டு முகவர் ஏற்கனவே  உற்பத்திசாலைக்கான காணியை கொள்வனவு செய்துள்ளதாகவும் சுற்றாடல் பாதிப்பு குறித்த அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.