சவூதி அரேபியாவில் நாளை 50 பேருக்கு மரண தண்டனை - இலங்கையர் யாருமில்லை - அமைச்சர் தலதா
சவூதி அரேபியாவில் நாளை தண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ள 50 பேரில் இலங்கையர்கள் எவரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் தலதா அத்துகோரளை இதனை இன்று (3) தெரிவித்துள்ளார்.
தகாத உறவு என்ற காரணத்தை காட்டி இலங்கை பெண் ஒருவருக்கு கல்லால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றும் தீர்ப்பு சவூதியில் அண்மையில் வழங்கப்பட்டது. எனினும் இதனை தடுக்கும் முயற்சிகள் எவையும் பலனிக்கவில்லை.
இந்தநிலையில் நாளை அவருக்கான தண்டனை நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இருப்பினும் தமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி நாளை பல்வேறு குற்றங்களுக்காக தண்டனைக்கு உள்ளாக்கப்படவுள்ள 50பேரில் குறித்த இலங்கைப்பெண்ணின் பெயர் இருக்கவில்லை என்று அத்துகோரளை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தண்டனை திகதி அறிவிக்கப்பட்டதும் தமக்கு அறிவிக்குமாறு சவூதியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தரவுகளின்படி இதுவரை காலத்தில் 8 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என்ற வகையில் 10 பேர் துபாய், அபுதாபி, லெபனான் மற்றும் சவூதி ஆகிய நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment