"புலிகளினால் கடத்தபட்ட 5 முஸ்லிம்களும், உயிருடன் இருப்பரென நம்பவில்லை"
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் காணாமல் போன எனது கணவர் முஹமட் ஹமல் அஜ்மீன் இன்னமும் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை மரணச் சான்றுதலும் பெற்றுவிட்டேன் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பது கடினமாக உள்ளது. எனவே எனக்கு நஸ்டஈடு வேண்டும் என மனைவி காணாமல் போனோரை கண்டறியும் விசாரணை ஆணைக்குழு முன் கேட்டுக்கொண்டார்.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் பங்கேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து சாட்சியம் அளிக்கையில்,
கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதியின் பின்னர் எனது கணவரை காணவில்லை. நான் அப்போது புத்தளத்தில் இருந்தேன். எனது கணவர் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். மாதத்திற்கு ஒரு முறை புத்தளத்திற்கு வருவார். இவர் காணாமல் போன காலத்தில் அப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. என் கணவருடன் சேர்த்து ஐந்து பேர் காணாமல் போயிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதுதான் எனக்கு சந்தேகம் உள்ளது.
என் கணவர் உட்பட காணாமல் போன ஐவரும் தற்போது உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. நான் மரணச்சான்றிதலும் பெற்று விட்டேன். மீதி நால்வரின் உறவினர் சிலர் நஸ்டஈடு பெற்றுள்ளனர். எனக்கு நஸ்டஈடு இன்னும் கிடைக்கவில்லை. எனவே நான் தற்போது நீர்கொழும்பில் வசித்து வருகின்றேன் என்னால் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பது கடினமாக உள்ளது. எனக்கு நஸ்டஈடு வேண்டும்.
இதனை விட ஆணைக்குழு வழங்கும் நஸ்டஈடு ஒரு இலட்சம் ரூபாய் போதாது. சொந்தக் காணி யாழ்ப்பாணத்தில் உள்ளது இதில் நான் வாழ்வதற்கு வீடொன்றை அமைத்து தருமாறும் அவர் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டார். இவர் உட்பட காணாமல் போன ஐவரின் உறவினர்கள் விடுத்த நஸ்டஈடு தொடர்பான வேண்டுகோள்களை ஆணைக்குழு பரிந்துரை செய்தது.
Post a Comment