Header Ads



அரசியலமைப்பு மறுசீரமைப்பிற்காக குழு - 3 முஸ்லிம்கள்

-எம்.எஸ்.பாஹிம்-

அரசியலமைப்பு மறுசீரமைப்பிற்காக மக்கள் கருத்தறிவதற்காக 24 பேரடங்கிய குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளது. இதில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தை பிரதிநிதிகள் உள்ளடங்குவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

அரசியலமைப்பை திருத்தி புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட இருப்பதோடு இது தொடர்பில் விசேட பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறுகிறது. அன்றைய தினம் பாராளுமன்றத்தை அரசியமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சமர்ப்பிப்பார்.

மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கியே அரசாங்கம் புதிய அரசியலமைப்பை தயாரிக்க இருப்பதோடு இதற்காக 24 பேரடங்கிய குழுவொன்றை நியமிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தார். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இந்த குழு நாடுபூராவும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாய்மூலமும் எழுத்து மூலமும் மக்களின் கருத்துக்களை பெறும்.இவ்வாறு திரட்டப்படும்  தகவல்களின் அடிப்படையில் மேற்படி குழு அறிக்கையொன்றை தயாரித்து அரசியலமைப்பு புனரமைப்பு தொடர்பான அமைச்சரவை உபகுழுவுக்கு வழங்க இருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

அரசியலமைப்பு திருத்தத்திற்காக பிரதமர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை 24 பேரடங்கிய குழுவின் தலைவராக சட்டத்தரணி லால் விஜேநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய உறுப்பினர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, பேராசிரியர் காமினி சமரநாயக்க, பேராசிரியர் ஏ.எம்.நவரத்ன பண்டார, பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர். என்.செல்வகுமாரன், எஸ்.தவராஜா, ஜனாதிபதி சட்டத்தரணி குசான் த அல்விஸ்,கலாநிதி ஹரினி அமரசூரிய, கலாநிதி குமுது குமாரி, சட்டத்தரணி சுனில் ஜயரத்ன. கலாநிதி உபுல் அபேரத்ன, தேமிய ஹுருள்ளே, வின்சண்ட் பதிராஜ,கலாநிதி எஸ்.விஜயந்திரன்,சட்டத்தரணி எம்.வை.எம்.பாயிஸ், நதீகா தமயந்தி, சட்டத்தரணி காந்தி ரணசிங்க, எஸ்.சீ,சீ.இலங்கோவன் மற்றும் சிரிமசிரி ஹபுஆரச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.