சியாம் வழக்கின் முதல் 2 குற்றவாளிகள், அரச சாட்சிகளாகி தண்டனையிலிருந்து தப்பித்தனர் - வாஸ் கடிதம்
சந்தேக நபர்களுக்கெதிரான விசாரணைகளின் போது பொலிசார் பாரபட்சமாக நடந்து கொள்வதாக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன கடிதம் எழுதியுள்ளார்.
கொழும்பு, பம்பலப்பிட்டியவைச் சேர்ந்த வர்த்தகர் முஹம்மது சியாம் என்பவரைக் கடத்திப்படுகொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன, அவரது மகன் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் தங்கள் தண்டனைக்கெதிராக மேன்முறையீடு செய்துள்ளனர்.
இதற்கிடையே வாஸ் குணவர்த்தனவின் கடிதமொன்றை திவயின பத்திரிகை பிரசுரித்துள்ளது. அக்கடிதத்தில் குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின்போது பொலிசார் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கடுமையான குற்றச்சாட்டொன்றை அவர் முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இரத்தினபுரி , கஹவத்தை தொடர் கொலைச் சம்பவங்களின் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் பொலிசார் அப்பாவிகளை கைது செய்து வழக்கை சோடித்துள்ளனர்.
அதே போன்றே எங்கள் வழக்கிலும் பொய்யான சாட்சியங்களை பொலிசார் முன்வைத்துள்ளனர். வழக்கின் முதல் இரண்டு குற்றவாளிகளும் அரசசாட்சிகளாக மாறி தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளனர்.
கொழும்பில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் தான் மேற்கொண்ட துணிச்சலான செயல்கள் இதன் காரணமாக தடைப்பட்டுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment