Header Ads



இலங்கையில் 191 பேரின் உயிரை காவுகொண்ட விமான விபத்து - இன்று 41 வருடங்கள் (படங்கள்)


(க.கிஷாந்தன்)

1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடம் மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியை மட்டுமல்லாது அப்பிரதேசத்தை அண்டிய ஏனைய பகுதி மக்களையும் பீதியடைச் செய்த சம்பவம் அது.

ஆம் இந்தோனேசியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த மார்டின் எயார் டீ.சீ 8 ரக பயணிகள் விமானம் சப்த கன்னியா என அறியப்படும் ஏழுகன்னியர் மலையில் ஐந்தாவது குன்றின் மீது விமானம் மோதி சிதறிய நாள் அது. விமானமோட்டிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர்.

இலங்கை நாட்டை பொறுத்தவரை இது வரை வெளிநாட்டு விமானம் ஒன்றுக்கு ஏற்பட்ட மிக மோசமான விபத்து இதுவாகும். மலையகத்திற்கு இது ஓர் அதிர்ச்சியளித்த புது அனுபவம். 191 பேரை பலியெடுத்த இந்த ஏழு கன்னியர் மலை ஆங்கிலத்தில் வில்கின் ஹில்ஸ் என்று அழைக்கின்றனர். இவ்விபத்தில் பலியான 190 பேர் தெப்பட்டன் தோட்ட கொத்தலென பகுதியில் அவ்விடத்திலேயே புதைக்கப்பட்டனர். அடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமானப்பணிப்பெண்ணில் உடலை அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்ற நெகிழ்ச்சியான சம்பவமும் இதில் அடங்கும்.

அத்தோடு விபத்துக்குள்ளான விமான பாகங்களில் எஞ்சியிருக்கும் டயர்கள் இரண்டு மட்டும் இதுவரை பாதுகாக்கபட்டு வருகின்றது. ஒரு டயர் நோட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ளது. நல்லநிலையிலிருக்கும் டயர் நோட்டன் விமலசுரேந்திதர அணைக்கட்டுக்கும் செல்லும் வழியில் சம்பவங்ளை சுருக்கமாக தாங்கி பார்வைக்காக காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்விடத்தில் சேகரிக்கப்பட்ட டொலர் தாள்கள் இன்னோரன்ன பொருட்களை அப்பிரதேச மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

அணைவரையும் புதைக்கப்பட்ட இடத்தில் நினைவுத்தூண் ஒன்றும் அமைந்துள்ளது. ஆனால் இன்று அப்பகுதி காடாக காட்சியளிக்கின்றமை கவலைக்குரியதாக இருக்கின்றது.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 4ஆம் திகதி இந்தோனேசியாவிலிருந்து உறவினர்கள் இவ்விடத்திற்கு வந்து செல்வது பலருக்கு தெரியாத விடயமாகவுள்ளது. விமானத்தின் கருப்புப்பெட்டி தகவலின் படி தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து சம்பவம் நடந்த இடத்தில் வசித்தவர்கள் இன்னமும் அப்பகுதிக்கு செல்பவர்களுக்கு சம்பவத்தை எடுத்துக்கூறுபவர்களாகவும் உள்ளனர். இவ்விமானத்தை செலுத்திய விமானி 8 தடவைகள் இலங்கை மார்க்கமாக மக்காவிற்கு விமானத்தை செலுத்திய அனுபவஸ்தர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும். இவ்வருடம் டிசம்பர் 4ஆம் திகதியுடன் இவ்விபத்து இடம்பெற்று 41 வருடங்கள் கடந்துவிட்டன.

இன்னமும் இச்சம்பவம் குறித்த நினைவுகளில் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. 2002 ஆம் ஆண்டு நான் இலங்கை வந்த பொழுது இந்த இடத்தை சென்று பார்வையிட்டேன்.

    விமானம் மோதிய இடத்தில், மலையில் மோதிய அடையாளம் அப்பொழுது காணக்கூடிய நிலையில் இருந்தது. அத்துடன் விமானத்தின் ஒரு சக்கரம், போலிஸ் நிலையத்திற்கு முன்னால், அணைக்கட்டு ஒன்றுக்கு அருகில் ஞாபகார்த்த சின்னமாக வைக்கப் பட்டுள்ளது. இப்பொழுதும் அப்படி இருக்கலாம் என்று நம்புகின்றேன்.

    எமது வழிகாட்டி சொன்னார், இந்த விமான விபத்தின் நினைவாக விமான நிலையத்திற்கு அருகில் ஒரு கட்டிடம் அமைக்கப் பட்டது என்று.

    ReplyDelete

Powered by Blogger.